Friday, October 9, 2009

ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்விஸ் பேங்க்!

ஸ்விஸ் வங்கிக்கும் கறுப்புப் பணத்துக்கும் என்ன தொடர்பு?

மற்ற வங்கிகளுக்கும் ஸ்விஸ் வங்கிக்கும் என்ன வித்தியாசம்?

வரிஏய்ப்பு செய்ய நினைப்பவர்கள் ஸ்விஸ் வங்கிகளைத் தேர்வு செய்ய என்ன காரணம்?

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் எவ்வளவு இருக்கிறது?

கோடீஸ்வரர்களால் மட்டும்தான் ஸ்விஸ் வங்கியில் கணக்கு தொடங்க முடியுமா?


- இப்படி ஸ்விஸ் வங்கி பற்றிய பல கேள்விகள் உங்கள் மனத்துக்குள் இருக்கும். அவை அனைத்துக்கும் பதில் சொல்லும் வகையில் வெளியாகியுள்ளது பத்திரிகையாளர் எஸ். சந்திரமெளலி எழுதிய ‘ஸ்விஸ் பேங்க்' என்ற புத்தகம். மினிமேக்ஸ் வெளியீடு.

Tuesday, September 8, 2009

ஒய்.எஸ்.ஆர்!

ஆர். முத்துக்குமார்

வருத்தங்களைக் காட்டிலும் சந்தேகங்களே அதிகமாக இருக்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல்கள் வருவது நின்றுபோய் ஏறக்குறைய இருபத்திமூன்று மணி நேர மெகா தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடலை மீட்டெடுத்துள்ளது இந்திய ராணுவம். கூடவே, அவருடன் பயணம் செய்த பைலட்டுகள் உள்ளிட்ட நால்வரின் உடல்களும். பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை. ஆந்திரமக்களுக்கு. ரெட்டி குடும்பத்துக்கு. முக்கியமாக, காங்கிரஸ் கட்சிக்கு.

ஆந்திராவுக்காக நிறைய கனவுகளை சுமந்து கொண்டிருந்த மனிதர் அவர். மாநிலத்தில் இருக்கும் எல்லா பிரச்னைகளையும் ஒவ்வொன்றாகத் தீர்க்கவேண்டும். குறிப்பாக, தெலுங்கானா மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னைகளைத் துடைத்தெறியவேண்டும் என்பது அவருடைய திட்டம். ஆட்சிக்கு வந்ததும் நக்சலைட்டுகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பலன் ஒன்றும் பெரிதாகக் கிட்டவில்லை. இருந்தும் தொடர் முயற்சியில் ஈடுபட்டார்.

மக்கள் நலத்திட்டங்களில் ரெட்டிக்கு நாட்டம் அதிகம். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களே அவரைத் தொடர் வெற்றியாளராக வைத்திருந்தன. நான் அறிவிக்கும் திட்டங்கள் கிராமங்களுக்கு முறையாகச் செல்கின்றனவா என்று ஆய்வுசெய்யப் போகிறேன் என்று சொன்னவர், செப்டெம்பர் 2, 2009 புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கர்நூலுக்குப் புறப்படுவதற்கு முன்னால், ‘வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக இனி ஒவ்வொரு கிராமத்துக்கும் பயணம் செல்ல இருக்கிறேன்.' என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டுத்தான் ஹெலிகாப்டரில் ஏறினார்.

காலை எட்டு முப்பத்தைந்துக்கு பெல் 430 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்ட முதல்வர் ரெட்டியுடன் அவருடைய முதன்மை செயலாளர் சுப்ரமணியம் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி ஆகியோரும் இருந்தனர். க்ரூப் கேப்டன் எஸ்.கே. பாட்டியா மற்றும் கேப்டன் எம்.எஸ். ரெட்டி ஆகிய பைலட்டுளைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட ஒருமணி நேரம் வரை ஹைதரபாத்தில் இருக்கும் பெகும்பேட் விமான நிலையத்துக்கு சிக்னல்கள் அனுப்பிக் கொண்டிருந்தது.

திடுமென 9.45க்கு சிக்னல்கள் தடைபட்டன. என்ன ஆயிற்று? விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். பத்தே முக்காலுக்கு சித்தூரில் இறங்கவேண்டிய ஹெலிகாப்டர் வந்து சேராததால் அங்கிருந்த அரசு அதிகாரிகள் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறினர். வயர்லெஸ், மொபைல், சேட்டிலைட் மொபைல் என்று அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி முதலமைச்சர் மற்றும் அவருடன் சென்றவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றிலும் தோல்வியே மிஞ்சியது.

புறப்பட்டு ஒரு மணி நேரமே ஆகியிருந்தால் அநேகமாக ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்துக்கு அருகே சென்று கொண்டிருக்கலாம் என்று கருதிய அதிகாரிகள், பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக தகவல் தொடர்புக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நினைத்தனர். நேரம் செல்லச் செல்ல அதிகாரிகளுக்கு இருந்த பதற்றம், பயமாக உருவெடுத்தது.

ஒருவேளை மோசமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு செல்ல முடியாமல் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் தரையிறங்கி இருக்கக்கூடும் என்று நம்பிய அதிகாரிகள், அதையே செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவ்வளவுதான். மறுநொடியே செய்திக்கு பரபரப்பு சாயம் பூசப்பட்டது.

ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கலாம் என்று கருதப்படும் அடர்ந்த வனப்பகுதி நக்சலைட்டுகள் செல்வாக்குள்ள பகுதி. ஆகவே, ஹெலிகாப்டரில் இருந்த முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் நக்சலைட்டுகளின் பிடியில் சிக்கியிருக்கக்கூடும் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கினர். குறிப்பாக, ஆங்கில ஊடகங்கள் இந்தக் கருத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின.

உடனடியாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டு, நல்லேமல்லா வனப்பகுதிக்கு மேலே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. விஷயத்தின் வீரியம் கருதி மத்திய அரசும் களத்தில் இறங்கியது. இந்திய வான்படைக்குச் சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கின. குறைந்த உயரமே பறக்கக்கூடிய ஹெலிகாப்டர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன.

இரவு நெருங்க நெருங்க மழை அதிகரித்தது. விளைவு, தேடுதல் பணியில் லேசான சுணக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பிரதமர் அலுவலகம், சோனியா காந்தி அலுவலகம், காங்கிரஸ் தலைமையகம் என்று எல்லா முனைகளில் இருந்தும் நெருக்குதல்கள் வரத்தொடங்கின. இதனையடுத்து ஏழாயிரம் ராணுவ வீரர்கள் சக்தி வாய்ந்த விளக்குகளின் துணையுடன் கால்நடையாகவே தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிராம மக்களும் மலைவாழ் மக்களும் முன்னாள் நக்சலைட் போராளிளும் வழிகாட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் நல்லமல்லா காட்டுப் பகுதியை செயற்கைக்கோள் கொண்டு புகைப்படம் எடுக்கும் பணிகள் தொடங்கின. நாற்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டபோதும் எதுவுமே பலனளிக்கவில்லை. மோசமான தட்பவெப்பம் காரணமாக படங்களில் தெளிவில்லை. காணாமல் போய் கிட்டத்தட்ட 24 மணி நேரம் வரை ஹெலிகாப்டர் குறித்தோ முதல்வர் உள்ளிட்டோர் குறித்தோ எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

செப்டெம்பர் 3, 2009. வியாழக்கிழமை. காலை ஒன்பது மணி அளவில் மலை உச்சியில் ஹெலிகாப்டர் ஒன்று தென்பட்டிருப்பதாக விமானப்படை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் அது சேதம் அடைந்துள்ளதா அல்லது நல்ல நிலையில் இருக்கிறதா
என்பது குறித்துத் தெரிவிக்கவில்லை. அதேபோல முதல்வர் ரெட்டி உள்ளிட்டோரின் நிலை குறித்தும் எந்தவிதமான தகவலும் இல்லை.

சுமார் பத்தரை மணி அளவில்தான் அந்த அபாயச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் கூடிய காங்கிரஸ் உயர்மட்டத்தலைவர்கள் குழு நீண்ட விவாதத்துக்குப் பிறகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

‘கர்நூல் மாவட்டத்தில் இருந்து கிழக்கே நாற்பது கடல் மைல் உயரத்தில் உள்ள ருத்ரகொண்டா மலைப்பகுதியில் முதல்வர் ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரின் சடலங்கள் ராணுவ கமாண்டோக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் பல துண்டுகளாக சிதறிக் கிடந்தன. உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. '

மாநில முதல்வர் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகி மரணமடைந்தது இந்திய வரலாற்றில் முதன்முறை. அதிர்ச்சியூட்டும் இந்தச் செய்தி கூடவே பல சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. பொதுவாக வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரில்தான் முதல்வர் ரெட்டி பயணம் செய்வது வழக்கம். ஆனால் கர்னூலுக்குப் புறப்படும் சமயத்தில் அது தயாராக இல்லை. மாற்று ஏற்பாடாக பெல் 340 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளார்.

உண்மையில் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக அது முதல்வரின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமலேயே இருந்தது. தவிரவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பறப்பதற்கான உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. ஆகவே, அந்த ஹெலிகாப்டரை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் 2010 டிசம்பர் வரை பறப்பதற்கு சான்றிதழ் பெற்றுள்ள ஹெலிகாப்டர்தான் அது என்று விமானத்துறை அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் ரெட்டி சென்ற ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் இணை பைலட் தவிர ஏழுபேர் பயணம் செய்ய முடியும். ஆனால் இந்தமுறை ஐந்து பேர் மட்டும் சென்றுள்ளனர். முக்கியமான அரசியல் நிகழ்வுக்காக மாநில முதல்வர் செல்லும்போது அவருடைய சக அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏவோ அல்லது எம்.பியோ உடன் செல்வது வழக்கம். ஆனாலும் வெறும் அரசு அதிகாரிகளோடு முதல்வர் அனுப்பப்பட்டது ஏன்? என்ற கேள்வி முக்கியமானது.

ஹெலிகாப்டர் பல துண்டுகளாக சிதறுவதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ‘அதற்கான காரணத்தை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் தகவல்கள் கிடைக்கும்' என்று கூறியிருக்கிறார். இந்த இடத்தில்தான் நக்சலைட்டுகள் தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்சிக்கு வந்த புதிதில் நக்சலைட்டுகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பிறகு நக்சலைட்டுகளைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். இதனால் ரெட்டி மீது நக்சலைட்டுகளின் ஆத்திரம் அடைந்து இருந்தனர் என்றும் சில ஆந்திர ஊடகங்கள் அடிக்கடி செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன. மேலும், தங்களுடைய ஹிட் லிஸ்டில் ரெட்டியின் பெயரையும் இடம்பெறச் செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தன.

அந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்து, ‘வானத்தில் சென்ற ஹெலிகாப்டரை நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் தேவையற்ற சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்க அரசு அந்தச் செய்தியை மறைத்திருக்கக்கூடும்' என்றும் சில சந்தேகங்கள் ஆந்திராவில் உலா வருகின்றன. ஆனால் ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்தும் அளவுக்கு சக்தி கொண்ட ஆயுதங்கள் எதுவும் நக்சலைட்டுகள் வசம் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.

உடலை மீட்டெடுக்கவே இருபத்துமூன்று மணி நேரங்கள் தேவைப்பட்டுள்ளன. அதன் பின்னால் புதைந்திருக்கும் உண்மைகளை மீட்டெடுக்க இன்னும் கொஞ்சம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை, இப்போதைக்கு!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் நான் எழுதிய கட்டுரை)

Friday, September 4, 2009

டெல்லிக்குப் போன சிறுத்தை!


கடந்த பத்து வருடங்களில் உங்களால் இரண்டு எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற முடிந்திருக்கிறது. இந்த வளர்ச்சி போதுமானதா?

நாங்கள் அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தந்திருத்தமாக வளர்ந்துகொண்டு இருக்கிறோம். தனித்தன்மையை இழக்காமல் வளர்ந்துவருகிறோம். சென்றமுறை திமுகவின் சின்னத்தில் வெற்றிபெற்றதால் அந்தக் கட்சியின் கடைசி உறுப்பினராக நான் செயல்பட முடிந்ததே தவிர, எங்களுடைய உணர்வுகளை சுதந்தரமாக வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்தமுறை சுயேட்சை சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளதால் எங்களுடைய சுதந்தரத்தில் யாரும் தலையிட முடியாது. ஆகவே, இது படிப்படியான வளர்ச்சி!


விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கல்கி இதழுக்காக எனக்கு அளித்த பேட்டியில் சொன்னது. தற்போது மினிமேக்ஸ் வெளியீடாக கட்சிகளின் கதை வரிசையில் ஒன்பதாவது புத்தகமாக “விடுதலைச் சிறுத்தைகள்' வெளியாகியுள்ளது. நூலாசிரியர் விழுப்புரத்தைச் சேர்ந்த ஜோதி நரசிம்மன்.

தலித் பேந்தர் இயக்கமாகத் தொடங்கியது முதல் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி வரை இந்த நூலில் சுருக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Friday, August 28, 2009

நாதுராம் விநாயக் கோட்ஸே!


இந்துத்துவ அரசியல் மீது கோட்ஸேவுக்கு ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்?

இறை பக்தியும் தேச பக்தியும் கொண்ட கோட்ஸே துப்பாக்கியைத் தூக்கியது ஏன்?

காந்தி மீதான விரோதப்போக்குக்கு அடிப்படைக் காரணம் என்ன?

காந்தி கொலையை கோட்ஸே திட்டமிட்டதும் செயல்படுத்தியதும் எப்படி?


நாதுராம் விநாயக் கோட்ஸேவின் வாழ்க்கை வரலாறை சுருக்கமான முறையில் அறிமுகம் செய்துவைக்கிறது மினிமேக்ஸ் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம். வாங்குவதற்கு இங்கே செல்லவும்.

Thursday, June 4, 2009

விறுவிறுக்க வைக்கும் வடகொரியா!

ஆர். முத்துக்குமார்
அமெரிக்காவுக்கு இரண்டாவது முறையாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது வட கொரியா. கடந்தமுறை பயன்படுத்திய அதே டெக்னிக். அணுகுண்டு. மே 25, 2009அன்று வட கொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனை அமெரிக்காவை மட்டுமல்ல, அணு ஆயுத நாடுகளான ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அனைத்துயுமே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நானும் ஒரு வல்லரசு என்று பெருமிதம் பொங்கச் சொல்லிக்கொள்வதில் எல்லா வளரும் நாடுகளுக்குமே ஆர்வம் அதிகம். ஒரு நாடு அந்தஸ்து என்ற கோணத்தில் பார்க்கும். இன்னொரு நாடு எதிரிகளுக்கு விடும் மிரட்டலாகப் பார்க்கும். இன்னொரு நாடு தற்காப்பு என்ற அளவில் பார்க்கும். வட கொரியாவுக்கும் அந்த ஆசை உண்டு. தப்புப்தப்பு. அவர்களுக்கு அது ஒரு கனவு.

உண்மையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு முன்பிருந்தே அணுஆயுத தயாரிப்பு முயற்சியில் வடகொரியா இறங்கிய தேசம். ஆனால் அது அத்தனை சுலபத்தில் கைக்கூடி வரவில்லை. காரணம், கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாகத் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்த வட கொரியாவுக்கு வெற்றி கிடைத்தது 2006ல்தான்.

தொழில்நுட்பம் தயார். ஆள்கள் தயார். இடம் தயார். வட கொரியாவின் வடக்கு பகுதியில் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள கில்ஜூ நகருக்கு அருகே உள்ள ஹவதேரி என்ற இடம். எல்லாம் தயார். சோதனை மட்டும்தான் பாக்கி. நவம்பர் 2006ல் அணுகுண்டுச் சோதனை நடத்தப்பட்டது. பூமிக்கு அடியில் வைத்து நடத்தப்பட்ட அணு குண்டு சோதனை, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளை மட்டுமல்ல, வடகொரியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் வியர்த்து விறுவிறுக்க வைத்துவிட்டது.

வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டது அமெரிக்கா. யாரைக் கேட்டு சோதனை செய்தீர்கள்? எத்தனை தைரியம் உங்களுக்கு? அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது மறந்துவிட்டதா?. அமெரிக்காவின் வழியில் இந்தியா உள்ளிட்ட பல தேசங்களும் வட கொரியாவை நிற்கவைத்துக் கேள்வி கேட்டன.

எல்லோரும் பதறியடித்துக் கேள்விகேட்டபோது, ‘நுறு சதவீத உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்டது இந்த அணுகுண்டுச் சோதனை. கொரிய தீபகற்க பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அமைதியை நிலை நாட்டவே இது நடத்தப்பட்டுள்ளது' என்று நிறுத்தி நிதானமாக விளக்கம் கொடுத்தது வடகொரியா.

தக்க பாடம் புகட்டியாகவேண்டும் என்று முடிவெடுத்தது அமெரிக்கா. ஆகட்டும் என்று தலையசைந்தது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில். உடனடியாக வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு வட கொரியா மற்றும் தங்களைத் தவிர வேறு யாரும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாது என்று நினைக்கும் அத்தனை நாடுகளும் ஆமாம் சாமி போட்டன. தவிரவும், இனி எந்தவித அணு ஆயுதச் சோதனைகளையும் வட கொரியா செய்யக்கூடாது என்று கெடுபிடிகள் போடப்பட்டன.

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் நாடு மோசமான நிலைக்குச் சென்றுவிடும் என்பதால் இனி வடகொரியா அடக்கி வாசிக்கும் என்பதுதான் சம்பந்தப்பட்ட நாடுகளின் கணிப்பு. ஆனால் நான் எதற்கும் துணிந்தவன் என்ற சொல்லும் வகையில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வடகொரியா.

பூமிக்கடியில் நடத்தப்பட்ட இந்த அணுகுண்டு சோதனையின்போதுன் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவுக்கு பூகம்ப அதிர்வை உணர்ந்ததாக அறிவித்தது வடகொரிய வானிலை மையம். கடந்த 2006 சோதனை நடத்தப்பட்ட அணுகுண்டைக் காட்டிலும் இது வீரியமிக்கது என்று அறிவித்துள்ளது வடகொரியா. ஆனால் சோதனை நடத்தப்பட்ட இடம் பற்றி எந்தவித தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

உண்மையில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ராக்கெட் சோதனை நிகழ்த்தியது வட கொரியா. அடுத்து அணுகுண்டு சோதனை நடத்தப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பாக அமைந்தது. ராக்கெட் சோதனை பெயரில் அணுகுண்டு ஏவுகணைகளை சோதனை செய்து பார்க்கிறது என்று குற்றம்சாட்டின மற்ற நாடுகள். தவிரவும், அணுகுண்டுச் சோதனைக்கு எதிர்ப்பும் விதித்தன.

எதிர்ப்புகளைப் பற்றி வட கொரியா துளியும் அலட்டிக்கொள்ளவில்லை. என் பணி அணுச்சோதனைந் நடத்துவதே என்று சொல்லிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்திய வடகொரியா, அதற்கு அடுத்த மூன்று நாள்களும் குறைந்த தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. பார்த்தீர்களா? நாங்கள் சொன்னது நடந்துவிட்டது. இதற்குத்தான் கடிவாளம் போடவேண்டும் என்று சொன்னோம் என்று அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு பேசின அணுஆயுத நாடுகள்.

ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏவுகணை தயாரிப்பு உத்திகளை விற்றிருக்கும் வட கொரியா, அடுத்து சிரியா, ஏமன். லிபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கும் விற்றுள்ளது என்பது அமெரிக்காவின் பகிரங்கக் குற்றச்சாட்டு. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நாடுகள் இருக்கும் பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளது என்று அலறுகின்றன மற்ற நாடுகள்.

அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்த அணுகுண்டு சோதனை என்பது இந்தியாவின் கவலை. ஆனால் சர்வதேச நாடுகளுக்கு நேரடியாக சவால்விடும் வகையில் இருக்கிறது இந்த அணுகுண்டுச் சோதானை என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வட கொரியாவுக்கு ஆயுதம் ஏற்றிவரும் கப்பல்களை தடுத்து நிறுத்துவோம் என்று கூறியுள்ளார். அப்படித் தடுக்கும் பட்சத்தல் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். தாக்குதல் நிச்சயம் என்று கூறியிருக்கிறது வடகொரியா!

Tuesday, April 21, 2009

பிரதமர் பிரகாஷ் காரத்?!

ஆர். முத்துக்குமார்

சரித்திரத் தவறு என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இடதுசாரிகள். 1996ல் பிரதமர் பதவியை ஏற்காமல் விட்டது அவர்களுக்குள் இன்னமும் நீருபூத்த நெருப்பாகவே இருக்கிறது. 1996 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் விநோதமாக இருந்தன. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கும் கிடைக்கவில்லை. எஞ்சியிருந்தவை இடது சாரிகள், ஜனதா தளம் மற்றும் சில பிராந்தியக் கட்சிகள். காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்கும் பணியில் இடதுசாரிகளும் ஜனதா தளத்தினரும் இறங்கினார்கள்.

ஜனதா தளம். சி.பி.எம், சி.பி.ஐ, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தி.மு.க, த.மா.கா, ஃபார்வர்டு ப்ளாக், அசாம் கன பரிஷத் எல்லோருமாகச் சேர்ந்து ஐக்கிய மொத்தம் 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி உருவாக்கினர். மொத்தம் 187 எம்.பிக்கள் தேறியிருந்தனர்.

யாரைப் பிரதமராக்குவது? இடதுசாரிகள் தவிர்த்த அத்தனைபேரும் ஜோதிபாசுவை நோக்கியே கைநீட்டினார்கள். அவரும் தலையசைத்துவிட்டார். சி.பி.எம்மில் இருந்தவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. உடனடியாக மத்தியக்குழுவில் விவாதிக்கவேண்டும் என்றனர். ஆளுக்கொரு கருத்து. சிலர் எதிர்த்தனர். சிலர் மறுத்தனர். சிலர் வரவேற்றுப் பேசினர். ஒத்தக்கருத்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

மத்திய அரசில் பங்கே தேவையில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலே போதுமானது என்று சொல்லிவிட்டது மத்தியக்குழு. உண்மையில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு ஜோதிபாசுவைப் பிரதமராக்குவதில் விருப்பம் இருந்தது. ஆனாலும் மத்தியக்குழு நிராகரித்துவிட்டதால் ஐக்கிய முன்னணிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

‘வாய்ப்பே இல்லை. நீங்கள்தான் பிரதமர். உங்கள் தலைமையில்தான் ஆட்சி’

திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள். தர்ம சங்கடத்தில் நெளிந்த சி.பி.எம் வேறு வழியில்லாமல் மீண்டும் மத்தியக்குழுவைக் கூட்டியது. வாதம். பிரதிவாதம். நீண்ட நெடிய இழுவைப்பிறகு அதே பல்லவி. புதிய ராகத்தில்.

‘காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசு அமைக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. அந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதே போதுமானது என்று கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது’

வேறு வழியில்லாமல் பிரதமர் வேட்டை நடத்தியது ஐக்கிய முன்னணி. மூப்பனார் பெயரைக்கூடப் பரிசீலித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டம் தேவே கௌடாவுக்கு அடித்தது. பிரதமரானார்.

கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.எம்க்குப் பிரதமர் ஆசை வந்திருக்கிறது. ஒருவேளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவி சி.பி.எம்முக்குக் கிடைக்கும் பட்சத்தில் அதை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருக்கிறார் சி.பி.எம்மின் சீதாராம் யெச்சூரி. அத்வானி, மன்மோகன் சிங், மாயாவதி, சரத்பவார், ஜெயலலிதா, பிரகாஷ் காரத்.. அடுத்தது யாருப்பா?

எல்லாம் சரி, ஒருவேளை தோழர் ஒருவர் பிரதமர் ஆகிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘நீங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருந்து விலகுகிறீர்கள் என்று இடதுசாரி அரசுக்கு ஆதரவு தருபவர்கள் கேட்கலாமா? ஆதரவு மறுபரிசீலனை போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்களா? ஏனென்றால் சில வார்த்தைகள் அவர்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்டவை என்பது போல நடந்து கொள்வார்கள். சரி, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்!

Saturday, April 18, 2009

நாங்களும் 'யூத்'துதான்

என். சொக்கன்

ட்வென்டி ட்வென்டி, ஐபிஎல் எல்லாம் இளைஞர்களுக்கான ஆட்டம். இதில் பெரிசுகள் எதற்கு? ஒதுங்கிக்கொண்டு இளசுகளுக்கு வழிவிடலாமில்லையா?

போன ஐபிஎல்லிலேயே இந்தக் கூக்குரல் தொடங்கிவிட்டது. குறிப்பாக சச்சின், திராவிட், கங்குலி, கும்ப்ளே, லஷ்மண் ஆகியோர் கடும் விமரிசனங்களுக்கு ஆளானார்கள்.

சச்சினாவது பரவாயில்லை. உடல்நிலை சரியில்லாததால் பாதி ஐபிஎல்லில் மட்டும் விளையாடிவிட்டுத் தப்பிவிட்டார். மற்ற சீனியர்கள் மிகச் சுமாராக ஆடிச் சொதப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இந்தக் குரல் மிக வலுவாகவே கேட்டது.

இதோ அடுத்த ஐபிஎல் வந்துவிட்டது. எல்லா சீனியர்களுக்கும் இன்னொரு வயது கூடுதலாகிவிட்டது. இப்போதாவது இவர்கள் ரிடையராகித் தொலைக்கக்கூடாதா? இளைய பாரதம் கேட்கிறது.

சீனியர்களின் நல்ல நேரம், ஐபிஎல் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு என்ன நல்ல நேரம்?

ட்வென்டி ட்வென்டி, ஐபிஎல்லின் இளம் சிங்கங்கள் பலர், தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் விளையாடியது இல்லை. நம் ஊர் மைதானங்களுடன் ஒப்பிடுகையில் அங்கே பந்து கொஞ்சம் அதிகமாக எழும்பி வரும், அதைக் கணித்து ஆடாமல் கண்ணை மூடிக்கொண்டு விளாசினால் காலி.

இங்கேதான் சீனியர்களுக்கு நல்ல வாய்ப்பு. முதல் நாளிலேயே அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த ‘யூத்’ ஆட்டங்களிலும் எங்களுக்கு இடம் உண்டு என்று நிரூபித்துவிட்டார்கள்.

முதல் ஆட்டத்தில் சச்சின் அரை சதம் அடித்து, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டத்தில் திராவிட் அரை சதம் அடித்துத் தன் அணியின் ஸ்கோரை ஓரளவு நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார்.

அதன்பிறகு வந்தவர், இவர்களையெல்லாம்விடச் சில ஆண்டுகள் வயதில் மூத்த, நிஜமான ‘சீனியர்’ கும்ப்ளே. ஐந்து ரன்னுக்கு ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்திவிட்டார்.

இந்த சீனியர் கொண்டாட்டத்தில் அடிபட்டது, சென்னை, ராஜஸ்தான் அணிகள். வேடிக்கையான விஷயம், இந்த இரு அணிகளும் சென்ற வருடம் இறுதிப் போட்டியில் இடம் பெற்றவை.

வின்னர், ரன்னர் இருவரையும் மண்ணைக் கவ்வ வைத்திருக்கும் சீனியர் படைகள் தொடர்ந்து ஜெயிக்குமா? அல்லது ஜூனியர்கள் தென் ஆப்பிரிக்க மைதானங்களுக்குப் பழகிக்கொண்டு, அதற்கேற்பத் தங்கள் ஆட்ட பாணியை மாற்றிக் கலக்குவார்களா? ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.

வெல்கம் ஐபிஎல்2!

ஐ.பி.எல் முதல் போட்டி - முழுவிவரம்

ஆர். முத்துக்குமார்

தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கிவிட்டது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட். எல்லா அணிகளும் பல புதிய வீரர்களை வாங்கியுள்ளன. கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் போன்ற அசகாய சூரர்கள் இப்போது ஐ.பி.எல் முகாமுக்குள் நுழைந்துள்ளார்கள்.

முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே. சென்னை அணிக்குத் தலைவர் மகேந்திர சிங் தோனி. மும்பைக்கு சச்சின் டெண்டுல்கர்.

டாஸில் வென்றவர் சென்னையின் தோனி. தன்னுடைய அணி முதலில் பந்துவீசும் என்றார். நன்றாகவே வீசியது. மும்பை வீரர்கள் ஒன்றும் வானவேடிக்கை எல்லாம் நிகழ்த்த முடியவில்லை. அடக்கித்தான் வாசிக்க முடிந்தது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். நாலு ஓவருக்கு நாற்பத்தி நான்கு. கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜோகிந்தர் சர்மா நான்கு ஓவர்களையும் நன்றாகவே வீசினார். மொத்தம் இருபத்தைந்து ரன்களை விட்டுக்கொடுத்தார்.

மும்பை அணித்தலைவர் சச்சின் தொடக்கத்தில் இருந்தே நிதானம் காட்டினார். 49 பந்துகளில் 59 ரன்கள். நிதானமாக ஆடிவந்த அணிக்கு உடுக்கை அடித்து உசுப்பேற்றியவர் நாயர். ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையை ஏற்படுத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை இந்தியன்ஸ் இருபது ஓவர்களில் 165 ரன்கள்.

ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற முடிவில் களத்துக்கு வந்தனர் சென்னை அணியினர். வந்த வேகத்தில் இரண்டு விக்கெட்டுகள். ஃப்ளிண்டாஃப் மாயாஜாலம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்த்தனர். ம்ஹூம். கால் சதத்துக்கு முன்பே பெவிலியனுக்குப் போய்விட்டார்.

ஹெய்டன் சாதிப்பார் என்று நினைத்தால் அவரும் 44 ரன்களுடன் கிளம்பிவிட்டார். முடிந்தவரை முயல்வது என்ற எண்ணத்தில் கேப்டன் தோனி ஆடினார். 36 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அவருடைய விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது. இருபது ஓவர்கள் முடியும்போது சென்னை அணியின் ஸ்கோர் 146.

சென்னை அணியை தோல்வியடையச் செய்ததில் மும்பை அணியில் மலிங்காவுக்கு முக்கியப்பங்கு உண்டு. நான்கு ஓவர்கள் பந்துவீசி பதினைந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், நிதானமாக ஆடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொடுத்த சச்சின் டெண்டுல்கருக்குத்தான் ஆட்டநாயகன் விருது.

Wednesday, April 15, 2009

எந்த மாநிலத்தில் யார் யார்? - பகுதி 2

ஆந்திரா

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் இரண்டுக்கும் சேர்த்து தேர்தல் நடக்கிறதது. மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 42 நாடாளுமன்றத் தொகுதிகளும் நடைபெற இருக்கும் தேர்தலில் மொத்தம் நான்கு அணிகள் களம் காண்கின்றன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. தெலுங்கு தேச அணியில் தெலுங்கு தேசம், இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. புதிய சக்தியாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யமும் இந்தத் தேர்தல் களத்தில் இருக்கிறது. கடந்த காலத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் நெருக்கம் காட்டிய பாஜக இந்தமுறை தனித்தவில் வாசிக்கிறது.

மேற்கு வங்கம்

இடதுசாரிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, ஃபார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன். காங்கிரஸ் கட்சி உள்ளூர் ஜாம்பவனான மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

Tuesday, April 14, 2009

26/11: மும்பை தாக்குதல்!

மும்பை தாக்குதல் பற்றி இன்னமும் ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ஒரு கோணத்தில் இருந்து பார்க்கப்பட்ட மும்பை தாக்குதல் இப்போது வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்து தான் தெளிவடைந்து இந்தியாவைக் குழப்பிக்கொண்டிருக்கிறது.


நவம்பர் 2ல் நடந்த மும்பை தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது எங்கே? எப்படி? எதற்காக? யார் இந்த லஷ்கர் ஏ தொய்பா? அல்லது ஜமா - உத் - தவா? ஐஎஸ்ஐக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா? ஒன்பது தீவிரவாதிகளைச் சமாளிக்க முடியாமல் தேசிய பாதுகாப்புப் படையினர் திணறியதற்கு என்ன காரணம்? எதிர் நடவடிக்கையின்போது எங்கெல்லாம் தவறு நிகழ்ந்தது? தாக்குதலுக்குப் பிறகு என்னென்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன? உள்ளிட்ட முக்கியமான சங்கதிகளைக் கொண்டு மினிமேக்ஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Friday, April 10, 2009

எந்த மாநிலத்தில் யார் யார்? - பகுதி 1

உத்தர பிரதேசம்

எண்பது நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். பிரதான கட்சிகள் என்று பார்த்தால் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி. வழக்கம்போல காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா. எல்லா கட்சிகளுமே தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த மாநிலத்தில் அதிகம் வெற்றிகளைக் குவிக்கும் கட்சி அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கும். அது, முலாயம் சிங்கா மாயாவதியா என்பதுதான் குழப்பம்.

பிகார்

லாலு பிரசாத், நிதீஷ் குமார் இவர்கள்தான் பிகாரின் தலைமைப் பீடாதிபதிகள். நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ராம் விலாஸ் பாஸ்வானும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். லாலுவுக்கு 34. பாஸ்வானுக்கு ஆறு. எதிர் அணியில் நிதீஷ் குமாரும் பாரதிய ஜனதாவும் கைகோத்திருக்கின்றன. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா 15 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. காங்கிரஸ் தனித்து நிற்கிறது.

ப.சிதம்பரம் மீதான 'பாக்தாத்' தாக்குதல்!

ஆர். முத்துக்குமார்

இரண்டு லட்சம் ருபாய் பரிசு தருகிறோம் என்கிறது சிரோன்மணி அகாலிதளம். வேலையும் கொடுத்து கைநிறையச் சம்பளமும் தருகிறோம்.. வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது குருத்வாரா பிரபந்தக் கமிட்டி. எம்.பி தேர்தலில் நில்லுங்கள்... எந்தத் தொகுதியை ஒதுக்கலாம்? என்று கேட்கிறது ஒரு அரசியல் கட்சி. ஜர்னைல் சிங் என்கிற பத்திரிகையாளருக்குத்தான் இத்தனை வெகுமதிகளும். இத்தனை வரவேற்புகளும். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது ஷூவை விட்டெறிந்த புண்ணியவான் என்று சீக்கியர்கள் ஜர்னைல் சிங்கைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ப. சிதம்பரத்துக்கும் ஜர்னைல் சிங்குக்கும் நடந்த வார்த்தை மோதலின் உச்சக்கட்டம் என்று ஷூ வீச்சை அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. தான் செய்த முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் செய்தது சரிதான் என்று ஜர்னைல் சிங் பேட்டி அளித்திருக்கிறார். ஆக, இந்த சம்பவத்தின் பின்னணியில் வலுவான வரலாற்று சோகங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட சம்பவங்கள் அவை.

பின்னணி வெகு நீண்டது என்பதால் காலிஸ்தானில் இருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும். இந்தியாவில் சீக்கியர்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார் ஒரு சீக்கியப் போராளி. காலிஸ்தான் என்றால் தூய்மையான மண் என்று அர்த்தம். அந்தப் போராளியின் பெயர், ஜர்னைல் சிங் பிந்த்ரன் வாலே. (ஷூ வீசிய பத்திரிகையாளரின் பெயரும் ஜர்னைல் சிங்!)

சீக்கிய இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வந்த பிந்த்ரன் வாலே, ஒருகட்டத்தில் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தன்னுடைய இயக்கத்தினருடன் சென்று பதுங்கிக்கொண்டார்.
கோயிலுக்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ளவும் அவர் தயங்கவில்லை.

தவறு செய்கிறீர்கள் பிந்த்ரன் வாலே. உடனடியாக பொற்கோவிலில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தது மத்திய அரசு. ம்ஹும். பிந்த்ரன் வாலே அசைந்துகொடுக்கவில்லை. அசைத்துப் பார்க்க முடிவெடுத்த இந்திரா, ராணுவத்தை பொற்கோவிலுக்குள் நுழைய உத்தரவிட்டார். ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். பொற்கோவில் விடுவிக்கப்பட்டது.

சீக்கியர்கள் இந்திராவைக் கொண்டாடுவார்கள் என்று நினைத்தார் இந்திரா. ஆனால் அனல் பார்வை வீசினர் சீக்கியர்கள். தங்கள் புனிதத் தலத்துக்குள் ராணுவத்தை ஆயுதங்களுடன் நுழையவைத்த இந்திராவுக்கு எதிராக கடும் கண்டனங்களை சீக்கிய அமைப்புகள் பதிவு செய்தன. இந்திரா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் தலைகள் சீக்கியர்களால் துண்டிக்கப்படும் என்று ஆவேசப்பட்டனர். எங்கு பார்த்தாலும் கண்டனக்கூட்டங்கள். பிறகு மெல்ல மெல்ல போராட்டத்தின் வீரியம் தணிந்தது.

அப்போதைக்கு அடங்கியது போல இருந்த அந்த வெறி அக்டோபர் 31, 1984 அன்று கொடூரமான முறையில் வெளிப்பட்டது. தன்னுடைய பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா. சுட்டவர்கள் சீக்கியர்கள் என்ற விஷயம் வெளியே கசிந்த மறுநொடியே ஆரம்பமாகி விட்டது கலவரம். காங்கிரஸ்காரர்களின் ரத்தம் அதிகபட்ச கொதிநிலைக்கு வந்திருந்தது. ஒருவர் பின் ஒருவராக வீதிக்கு வரத் தொடங்கினர்.

ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது. அடியுங்கள். உதையுங்கள். உயிரோடு கொளுத்துங்கள். கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர் உள்ளூர்த் தலைவர்கள்.கொப்பளிக்கும் ஆத்திரத்துடன் காங்கிரஸ்காரர்கள் சீக்கியர்களைத் தேடித்தேடி தாக்குதல் நடத்தினர். உடனடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் டெல்லியின் புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் சீக்கியர்களே. சுல்தான்புரி, மங்கோல்புரி, த்ரிலோக்புரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.

இரும்புத் தடி. பளபளக்கும் கத்தி. மண்ணெண்ணெய் பாட்டில் சகிதமாகக் கலவரக்காரர்கள் களத்தில் இறங்கியிருந்தனர். ஆனால், சீக்கியர்களைத் தேடிப்பிடிப்பதில் சிரமம் இருந்தது. என்ன செய்யலாம்?

வாக்காளர் பட்டியலை கையில் எடுத்துக்கொள்வோம். வீட்டுவாசலுக்கே சென்று தாக்குவதற்கு வசதியாக இருக்கும் என்றார் ஒரு புண்ணியாத்மா. ஆலோசனை கொடுத்த நபருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, உற்சாகமாகப் புறப்பட்டனர். தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதறி ஓடினர் சீக்கியர்கள். ஓர் இடம் முடிந்தால் அடுத்த இடம். அது முடிந்தால் அடுத்தது. சளைக்காமல் ரகளை செய்தனர் காங்கிரஸ் தொண்டர்கள். சீக்கியர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத அபாயகரமான சூழல் அது.

சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்குப் பலியாகியிருந்தனர். வெறியாட்டத்துக்கு இடையே பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்திருந்தார் ராஜிவ் காந்தி. சீக்கியர்கள் படுகொலை குறித்து செய்தியாளர்கள் ராஜிவ் காந்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதிலை சீக்கியர்களால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை.

‘பழுத்த மரம் சாயும்போது, நிலம் அதிரத்தான் செய்யும்.’

சீக்கியர்களுக்கு எதிராக நடந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்ற முக்கியஸ்தர்களே காரணம் என்று சீக்கியர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கால் நூற்றாண்டுகளாக நிலுவையிலும் இழுவையிலும் இருந்த இந்த வழக்கில் ஜெகதீஷ் டைட்லரும் சஜ்ஜன் குமாரும் குற்றமற்றவர்கள் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தது சி,பி.ஐ.

அவ்வளவுதான். கொதித்து எழுந்துவிட்டனர் சீக்கியர்கள். சாலை மறியல், ரயில் மறியல் என்று மீண்டும் போராட்டக்களத்துக்கு வந்துவிட்டனர். காங்கிரஸ் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த விடுவிப்பு நிகழ்ந்துள்ளது என்பது சீக்கிய அமைப்புகளின் குற்றச்சாட்டு. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டைட்லர் விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இது பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கை ஆத்திரப்படுத்திவிட்டது. தைனிக் ஜார்கன் என்ற பத்திரிகையின் சிறப்பு செய்தியாளராக இவர். காங்கிரஸ் அலுவலகச் செய்திகளை சேகரிப்பது இவரது பணியாக இருப்பதால் பல காங்கிரஸ் தலைவர்களை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தி ப. சிதம்பரத்திடம் நேரடியாகவே விளக்கம்கேட்க முடிவு செய்தார். கேட்டார். பதில் திருப்தி தரவில்லை. ஷூவை வீசியெறிந்து தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டார்.

ஏற்கெனவே ஜார்ஜ் புஷ் மீது நடந்த பாக்தாத் ஷூ தாக்குதல் நன்றாக நினைவில் இருந்ததால் இந்த விவகாரத்தை மிகவும் நாசூக்காகக் கையாண்டார் ப. சிதம்பரம். ஜர்னைல் சிங்கைப் பக்குவமாகக் கையாளுங்கள் என்று பாதுகாவலர்களிடம் சொன்னார். மன்னித்துவிட்டேன் என்றார். ஜர்னைல் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிட்டார்கள் சீக்கியர்கள்.

ஜெகதீஷ் டைட்லரை நிரபராதி என்று அறிவிக்க சி.பி.ஐக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி தரப்படும் என்று எச்சரித்துள்ளன சீக்கியக் கட்சிகள்.

டெயில் பீஸ்:

சீக்கியர்களின் எழுச்சியால் அதிர்ந்து போயிருக்கும் காங்கிரஸ் தலைமை, டெல்லி தேர்தலில் போட்டியிடும் ஜெகதீஷ் டைட்லரையும் சஜ்ஜன் குமாரையும் வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

Monday, April 6, 2009

ஜெயலலிதாவின் பலம்... பலவீனம்!

அ.தி.மு.க என்ற இயக்கம் எம்.ஜி.ஆரின் தலைமையின் கீழ் செயல்பட்டதைக் காட்டிலும் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்பட்ட காலங்களே அதிகம். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க என்ற கட்சியை இன்னமும் உயிரோட்டத்துடன் இயங்க வைத்திருப்பதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது.

எம்.ஜி.ஆர் ஏன் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார்? ஜெயலலிதாவை ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் புறக்கணித்தார் என்பது உண்மையா? ஜெயலலிதா ஆர்.எம்.வீ மோதலுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி? முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டெடுத்தது எப்படி? தன்னம்பிக்கை என்பது ஜெயலலிதாவின் பலமா? பலவீனமா?


இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மினிமேக்ஸ் வெளியீடாக வந்திருக்கும் 'ஜெயலலிதா'. நூலை எழுதியிருப்பவர் ஜெ. ராம்கி.தமிழின் முக்கியமான வலைப்பதிவர்களுள் ஒருவர். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை முன்னதாக எழுதியிருக்கிறார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Sunday, April 5, 2009

திமுக வேட்பாளர்கள் தயார்!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகின்றன. இதில் முதலிடம் தே.மு.தி.கவுக்குதான். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. தற்போது தி.மு.க 21 வேட்பாளர்களைக் கொண்ட தன்னுடைய பட்டியலை வெளியிட்டுள்ளது.

1.மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
3.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
4.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
5.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
6.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
7.கிருஷ்ணகிரி - சுகவனம்.
8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.
9. கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
10.திருவண்ணாமலை - வேணுகோபால்.
11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.
14.பெரம்பலூர் - நெப்போலியன்.
15.நீலகிரி (தனி) - ராசா.
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
17.மதுரை - மு.க.அழகிரி.
18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
19.தூத்துக்குடி - ஜெயதுரை.
20.நாமக்கல் - காந்தி செல்வன்.
21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.

Friday, April 3, 2009

மூவர் அமைத்த நான்காவது அணி!

ஆர். முத்துக்குமார்

தேசிய அரசியலில் மூன்றாவது அணி என்பது கேலிக்குரிய சங்கதி. பெரிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட அல்லது பிரதமர் கனவில் அரசியலை நகர்த்துகின்ற தலைவர்களால் உருவாக்கப்படும் அணி என்று சொல்லப்படுவதுண்டு.

தற்போது தேசிய அளவில் மூன்றாவது அணி தேர்தல் களத்தில் இருக்கிறது. அதன் முக்கியமான உறுப்பினர்கள் இடதுசாரிகள். தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

திடீரென நான்காவதாக ஒரு அணி உருவாகியிருக்கிறது. உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் செல்வாக்கு கொண்ட முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவரே இந்த நான்காவது அணியின் காப்பிரைட் ஹோல்டர்கள். 80 + 42 தொகுதிகளில் இந்த நான்காவது அணி ஏதேனும் மேஜிக் செய்துவிட முடியும் என்று நம்புகிறது இந்த மூவர் அணி.

அப்படி ஜெயித்தால்?

இதற்கான பதிலை லாலு சூசகமாகச் சொல்லிவிட்டார்.

'நான்காவது அணி காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானது அல்ல'

Wednesday, April 1, 2009

பா.ஜ.கவுக்கு சில கேள்விகள்!

ஜனசங்கத்தின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்?

பா.ஜ.க.வின் பின்னணி என்ன?

எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி?

பாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா?

இந்துத்வாவைத் தொடர்ந்து வலியுறுத்துவது பாரதிய ஜனதாவுக்கு பலமா? பலவீனமா?




மினிமேக்ஸ் வெளியிட்டுள்ள 'கட்சிகளின் கதை : பா.ஜ.க' புத்தகம் இதற்கான பதில்களைக் கொடுக்கிறது. நூலை எழுதியவர் எஸ். சந்திரமெளலி. பத்திரிகையாளர். கல்கி பத்திரிகையில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதிவருபவர்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Tuesday, March 31, 2009

யார் அடுத்த பிரதமர்?

ஆர். முத்துக்குமார்

இந்திய தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. தற்போதைய சூழலில் மொத்தம் மூன்று அணிகள் களத்தில் இருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. கடந்தமுறை பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தடுமாற்றம் காட்டிய இந்த அணி தற்போது மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான அணியின் பிரதமர் வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி. கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வாஜ்பாய் இந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை.

இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணியில் இருக்கும் முக்கியமான பிரச்னையே யார் பிரதமர் வேட்பாளர் என்பதுதான். தலைவர்கள் அதிகம் கொண்ட அணி என்பதால் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. இவர்கள் தவிர, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி தேசிய அளவில் தன்னுடைய வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார். உ.பி மற்றும் பிகாரில் லாலு, முலாயம் சிங் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் மூவரும்
அணி அமைத்துள்ளனர்.

அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யவேண்டிய பொறுப்பு அநேகமாக இடதுசாரிகள் மற்றும் மாயாவதியின் கரங்களில் இருப்பது போலவே தோன்றுகிறது. பார்க்கலாம்.

Saturday, March 28, 2009

79 பக்கங்களில் ஒரு சவால் - அ. குமரேசன்

உங்களுடைய ‘அ.தி.மு.க.’ புத்தகம் படித்தேன். அது தொடர்பான சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பவர்களுக்கு அரசியல் கட்சிகள் பற்றித் தெரிந்துகொள்ளும் தூண்டுதலை அளிப்பதில் உங்கள் புத்தகம் வெற்றிபெறுகிறது. அரசியல் அக்கறை இருந்தாலும் போதிய தகவல் ஞானமின்றி தற்போதைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு முழுமையான பார்வையை வளர்த்துக்கொள்ளும் முனைப்பை நிச்சயமாக இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. ஒரே வாசிப்பில் புத்தகத்தை முடிக்கத் தூண்டுகிற எளிய, விறுவிறுவென்ற, சுவாரசியமான அடுக்கு நடை முக்கியமான பலம். புத்தக வாசிப்பிலிருந்தே நழுவிக் கிடப்போருக்கும் ஆர்வத்தைத் தூண்டுவது இது. அவ்வகையில் இது ஒரு சேவை.

சில எழுத்துக் குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக, புத்தகத் தலைப்பிலேயே ‘ அ.தி.மு.க ’ என்று, முதல் மூன்று எழுத்துக்களை அடுத்துப் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கடைசி எழுத்தாகிய ‘க’ அப்படிப் புள்ளியோடு முடியாமல் நிற்கிறது. ஒன்று, கடைசியில் வரும் ‘க’ என்ற எழுத்துக்கும் புள்ளி வைத்திருக்க வேண்டும். அல்லது, அந்தப் புள்ளிகளே இல்லாமல் அதிமுக என்றே எழுதலாம். பத்திரிகைகளில் திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக, சிபிஐ(எம்எல்) என்று எழுத்தையடுத்த புள்ளி இல்லாமல்தான் எழுதுகிறார்கள்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பின், அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது (பின்னர் அது நீதிமன்றத்தில் போய் சிக்கிக்கொண்டது), மிக மிகச் சாதாரணமானவர்களை அமைச்சர்காளாக்கியது, தொடக்க ஆண்டுகளில் மேல்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்தியது போன்ற நடவடிக்கைகளும் எம்ஜிஆர் பற்றிக் குறிப்பிடப்பட வேண்டியவை. பொதுவாகவே அவரிடத்தில் மற்றவர்களுக்கு உதவிடும் குணம் இருந்தது என்பதும் ஒரு அடிப்படையான பலம்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அவர் எப்படி எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியின் தலைவர் தான்தான் என்பதை நிறுவினார் என்ற பின்னணியை சரியாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியொரு கட்சியின் சூழலில் தலைமையிடத்தைப் பிடிக்கிற போராட்டத்தில் பெரும் வெற்றிபெற்றவர் அவர். ஒரு பெண் என்ற வகையில் இது ஒரு சாதனையும் கூட.

அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் சில ஆளுமைகளும் குறிப்பிடத்தக்கவை. மாநிலம் முழுவதும் நிலவிய குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளித்தது; தமிழர் விரோதி என முத்திரை குத்தப்படும் என்று தெரிந்தும் விடுதலைப் புலிகள் பற்றிய தம் கருத்தை வெளிப்படுத்தியது; காஞ்சி சங்கராச்சாரிகள் கைது; அகில இந்திய அரசியலில் தலையீடு...இப்படி நிறைய இருக்கின்றன.

அவரது சில எதிர்மறை அம்சங்களும் குறிப்பிடப்படவேண்டியவை: கட்சிக்குள் ஜனநாயகமின்மை, போட்டி இந்துத்வா கட்சி போல் நடந்துகொண்டது, அயோத்தி மசூதி இடிப்புக்கு ஆதரவு, கரசேவைக்கு ஆள் அனுப்பியது, பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்கச் செய்தது ...

-இப்படிப்பட்ட தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தால் புத்தகம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.
அதே நேரத்தில், 79 பக்கங்களுக்குள் எழுதியாக வேண்டிய வரம்புக்குள் செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். முழுமையான முழுமை என்பது எவருக்கும் ஒரு பெரிய சவால்தான். முழுமையாக சாத்தியமாகாத சவால். எனக்கும்தான்.

புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற பல தகவல்கள் எனக்கு அதைப் படிப்பதற்கு முன் தெரியாது. அந்தத் தகவல்களை சேகரிப்பதற்கு நீங்கள் சிரத்தையோடு முயன்றதால்தான் இந்தப் புத்தகம் முதலில் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆயினும் ஊடகவியலாளர் என்ற முறையில், எழுத்தாளர் என்ற முறையில் நமக்கேது முழு திருப்தி?
அடுத்தடுத்த புத்தகங்களில் மேலும் மேலும் ஆழம் காண வாழ்த்துக்கள்.

அன்புடன்-
அ. குமரேசன்

0

'கட்சிகளின் கதை' வரிசையில் மினிமேக்ஸ் மூலம் வெளியாகியுள்ள 'அ.தி.மு.க' புத்தகம் குறித்து பத்திரிகையாளர், தீக்கதிர் இதழின் தலைமைச் செய்தியாளர், ஊடக விமரிசகர் அ. குமரேசன் அவர்களின் பார்வை இது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Thursday, March 26, 2009

எல்லாக் கட்சிகளும் சனியன்தான் - ராமதாஸ்

'தமிழ்நாட்டில் சிங்கிள் லார்ஜஸ்ட் கம்யூனிட்டி வன்னியர்கள். ஆனால் அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம். அரசியலில் பாருங்கள். நாங்கள் முதல் மந்திரி ஆனதேயில்லை. கட்சித் தலைவர்களாகக்கூட ஆனதில்லை. டெல்லியில் குட்டி மந்திரியாகக்கூட ஆனதில்லை. சுதந்தரத்தால் எங்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அதனால்தான் நாங்கள் இப்போது எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியை இருபது ஆண்டுகாலம் பார்த்துவிட்டோம். நன்மையில்லை. தி.மு.க ஆட்சி செய்தபோது பண்ருட்டி ராமச்சந்திரன் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது சம்பந்தமாக சட்ட ஆலோசனையை எல்லாம் திரட்டிக் கொடுத்தார். அப்படியிருந்தும் அந்த ஃபைலை யாரும் சட்டை செய்யவில்லை. அதிமுகவும் பத்து வருடம் ஆண்டது. நன்மை எதுவும் வரவில்லை.

ஆகையால், கட்சி என்றாலே எங்களுக்கு இப்போது வெறுப்பாக இருக்கிறது. அதனால்தான் வோட்டு போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். எல்லாக் கட்சியுமே சனியன்தான். இதில் எந்த சனியன் தேவலாம் என்றால் எப்படி பதில் சொல்வது. இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில், புத்தியுள்ள மக்கள் வோட்டுச் சாவடிக்குப் போகமாட்டார்கள்.'

- எண்பதுகளின் பிற்பகுதியில் ஜூனியர் விகடன் இதழுக்கு ராமதாஸ் அளித்த பேட்டியிலிருந்து.

வன்னியர் சங்கத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உருவான கதையை மினிமேக்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் வன்னியர்களின் அடிப்படை கோரிக்கைகள் என்ன? அதை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள், அரசியல் கட்சியாக மாறுவதற்கு எது அடிப்படையாக இருந்தது, கூட்டணி அரசியலில் பாமக இறங்கியதற்கு என்ன காரணம்? பாமக மீது வைக்கப்படும் விமரிசனங்கள் என்னென்ன? இப்படி பல முக்கிய விஷயங்களையும் இந்தப் புத்தகம் விவாதித்துள்ளது.



புத்தகத்தை எழுதியவர் ஆர். முத்துக்குமார். கிழக்கு பதிப்பகத்தின் முதன்மைத் துணை ஆசிரியராகவும் MiniMaxன் பொறுப்பாசிரியராகவும் இயங்கிவருகிறார். குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் இதழ்களில் நடப்பு அரசியல் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். அன்புள்ள ஜீவா, இந்திரா, பெரியார், மினிமேக்ஸ் வழியாக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Thursday, March 19, 2009

அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின்படி...!

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். இந்தப் பெயரை நினைவிருக்கிறது அல்லவா? 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்படுவதற்குக் காரணகர்த்தா இவர்தான். கோகலே, திலகர், காந்தி, நேரு, காமராஜ், இந்திரா, ராஜிவ் என்று பல தலைவர்களின் கரங்களில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது சோனியா காந்தியிடம் வந்து சேர்ந்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பற்றி காங்கிரஸ் தலைவர்களி எவர் பேட்டி கொடுத்தாலும் சரி. அவர்கள் வாயில் இருந்து வெளிவரும் முக்கியமான மூன்று வார்த்தைகள்என்னென்ன தெரியுமா?

'அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின்படி...'

இவற்றை உச்சரித்த பிறகுதான் அடுத்த வார்தையே வெளியில் வரும். சோனியா என்ற ஒற்றை நபர்தான் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்தி்ரம். சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, ஆட்சி அமைத்து, ஐந்து ஆண்டுகளைக் கடந்து அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகி உள்ளது.

ஐந்து ஆண்டுகளும் ஆட்சி மன்மோகன் சிங் வசம் இருந்தாலும்கூட கட்சி, ஆட்சி என்ற இரண்டு குதிரைகளுக்கான லகான்களும் சோனியா வசம் மட்டுமே இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்தச் சூழ்நிலையில் சோனியா என்பவர் எப்படிப்பட்டவர், அவருடைய வாழ்க்கைப்பின்னணி என்ன? அரசியலில் எந்த அளவுக்கு அவருக்கு ஆர்வமும் அனுபவமும் இருந்தது? கட்சித் தலைவர்கள் அவரை எப்படி ஏற்றுக்கொண்டனர்? இப்படிப் பல விஷயங்களையும் வாசகர்களுக்குச் சுருக்கமாக அறிமுகம் செய்யும் வகையில் மினிமேக்ஸ் 'சோனியா' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.


புத்தகத்தை எழுதியிருப்பவர் அஜிதன். இயற்பெயர் அசோகன். தமிழின் முக்கியமான பத்திரிகையாளர். த சண்டே இந்தியன் என்ற பத்திரிகையின் தமிழ்ப்பதிப்புக்கான ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Wednesday, March 18, 2009

அம்பானிகள் பிரிந்த கதை!

ஒரு குடும்பத்தின் பிரிவு, தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது ஏன்?

அம்பானிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு அம்பானி சகோதரர்களின் பங்கு எவ்வளவு?

எந்த அடிப்படையில் சகோதரர்களுக்கிடையே சொத்துகள் பிரிக்கப்பட்டன?

பாகப்பிரிவினைக்குப் பிறகு முகேஷ் வசம் அதிக சொத்துகள் உள்ளதன் பின்னணி என்ன?

அம்பானி சகோதரர்கள் பிரிந்தது இந்தியத் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?


அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் தங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு தனித்தனியே பிரிந்துவிட்டனர். அந்த பிஸினஸ் சகோதரர்கள் பிரிந்த கதையை 'அம்பானிகள் பிரிந்த கதை' என்ற நூலாக மினிமேக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் மேலே இருக்கும் அத்தனை கேள்விகளுக்குமான விடைகள் கிடைக்கும்.


புத்தகத்தின் நூலாசிரியர் என். சொக்கன் தொழில்வல்லுநர்கள், வர்த்தக நிபுணர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு வாசகர்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

பாகிஸ்தானும் தீவிரவாதமும்!

ஆர். முத்துக்குமார்

மற்ற எந்தப் பிரச்னையைக் காட்டிலும் தீவிரவாதிகளின் பிரச்னைதான் பாகிஸ்தானுக்கான மிகப்பெரிய தலைவலி. அது எத்தனை உக்கிரமானது என்பதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ஆகப்பெரிய உதாரணம். விஷயம் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

1947ல் காஷ்மீரை முன்னிலைப்படுத்தி முதல் யுத்தத்தைத் தொடங்கியபோது தமது ராணுவத்தினரைக்கூட பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நம்பவில்லை. அவர்கள் நம்பியது பாகிஸ்தான் எல்லையோரத்தில் திரிந்துகொண்டிருந்த பதான் ஆதிவாசிகளைத்தான் கூலிக்கு எடுத்து காஷ்மீருக்குள் அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எல்லாம் வழங்கி காஷ்மீரைக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள்.

ஆனால் அந்த முயற்சிகளை நேரு, மௌண்ட்பேட்டன் உள்ளிட்டோர் புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்தி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டதோடு பதான் தீவிரவாதிகளையும் ஓட ஓட விரட்டி அடித்தனர். பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் தீவிரவாதிகளுக்குமான உறவின் முதல் அத்தியாயம் 1947 யுத்தம்தான். அதன்பிறகு பாகிஸ்தானுக்கென்று பிரத்யேகமாக உளவு அமைப்பு ஒன்று உருவானது. பெயர், ஐ.எஸ்.ஐ.

உளவு செய்வதுதான் இதன் வேலை என்றாலும்கூட ஐ.எஸ்.ஐக்கு அதிகம் பிடித்தமான வேலை தீவிரவாதிகளுக்குக் கொம்பு சீவி விடுவதுதான். ஆப்கனிஸ்தானில் இருக்கும் முஜாஹிதீன்கள், தாலிபன்கள் என்று என்னென்ன பெயர் தீவிரவாதிகள் செயல்படுகிறார்களோ அவர்களை எல்லாம் அழைத்து வந்து, முறைப்படி ஆயுதப்பயிற்சிகள் கொடுத்து அவர்களை தீவிரவாதச் செயல்களுக்குத் தூண்டுவது ஐ.எஸ்.ஐயின் பிரதானப் பணி.

ஆயுதம் வேண்டும். பணம் வேண்டும். சொகுசாகத் தங்க இடம் வேண்டும் என்று தீவிரவாத இயக்கங்கள் என்ன கேட்டாலும் தயங்காமல் கொடுத்தது ஐ.எஸ்.ஐ. இதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காலால் இடும் உத்தரவுகளைத் தலையால் செய்து முடிக்கத் தயாராக இருந்தனர் தீவிரவாதிகள். 1965ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற யுத்தத்துக்குப் பிள்ளையார்சுழி போட்டது இந்தத் தீவிரவாதிகள்தான்.

இந்தியாவின் கட்ச் வளைகுடாப் பகுதிக்கு தீவிரவாதிகளை அனுப்பி அங்கே குழப்பங்களை விளைவித்தது. ராணுவம் கட்ச் பக்கம் பார்வையைத் திருப்பும்போது காஷ்மீருக்குள் கால் பதிக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் திட்டம். காஷ்மீருக்குள் ஓசையின்றி ஊடுருவி அங்கேயே தங்கி, கலகத்தை ஏற்படுத்தவேண்டும். பிறகு மெல்ல மெல்ல ராணுவத்தினரை காஷ்மீருக்குள் அனுப்பி யுத்தம் நடத்தி காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்பது அவர்கள் போட்ட கணக்கு. அப்போது காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பிய தீவிரவாதிகளுக்கு ஆஸாத் காஷ்மீர் போராளிகள் என்று பெயர் வைத்துக்கொண்டனர்.

ஆஸாத் காஷ்மீர் போராளிகளை முதலில் அனுப்பிவிட்டு, பிறகுதான் பாகிஸ்தான் ராணுவத்தினர் களத்தில் இறங்கினர். பலநாள்கள் நடந்த யுத்தத்தில் இறுதி வெற்றி இந்தியாவுக்குத்தான். மீண்டும் தீவிரவாதிகளின் பங்களிப்பு பல்லிளித்தது. தொடர்ந்து தோல்வியையே தந்து வந்தாலும் முஜாஹிதீன்களையும் ஆஸாத் காஷ்மீர் போராளிகளையும் தொடர்ந்து நட்பு வட்டத்திலேயே வைத்திருந்தனர் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

இந்தியாவை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை இந்தியாவின் முக்கியப்பிரிவுகளுக்கு ஊடுருவச் செய்து அவ்வப்போது குழப்பம் விளைவித்தது. முக்கியமாக், இந்தியாவில் காலிஸ்தான் போராளிகள் குடைச்சல் கொடுத்தபோது அவர்களை ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் சந்தித்து மூளைச்சலவை செய்து இந்தியாவுக்குள் சிக்கல் ஏற்படுத்த முனைந்தனர். பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் தீவிரவாதிகள் மீதான் காதல் எதுவரை சென்றது தெரியுமா?

எழுபதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கனிஸ்தானை ஆக்ரமித்தபோது அவர்களை எதிர்த்துப் போராட ஆப்கன் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து யுத்தத்துக்கு அனுப்பியது ஐ.எஸ்.ஐ. அதன்பிறகு காஷ்மீரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்
லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷே முகமது, ஜமா இஸ்லாமியா , ஹிஸ்புல் முஜாஹிதீன் என்று
பல தீவிரவாத இயங்களுக்கு நிரந்தரப் புரவலராக செயல்படுவது ஐ.எஸ்.ஐதான்.

எண்பதுகளில் தொடங்கி முஷார்ஃப், சர்தாரி காலம் வரை தொடர்ந்து தீவிரவாதிகளுக்குத் தங்கள் நேசக்கரங்களை அலுக்காமல் சலுக்காமல் நீட்டி வருகிறது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்பது கூரான இருமுனைகளைக் கொண்ட கத்தி போன்றது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அது கையாள்பவரையே தாக்கும் ஆபத்து இருக்கிறது. தற்போது பாகிஸ்தானின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, ஆப்கனிஸ்தான் தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது வெளிப்பட்டிருக்கிறது. தற்போது உருவாகி இருக்கும் சூழல் மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தான் என்ற தேசத்தையே கபளீகரம் செய்து விடுவதற்கு எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.

இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் அரசியல்வாதிகள், உளவு அதிகாரிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் தாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நேசிக்கும் தீவிரவாதிகளை உதறித்தள்ள வேண்டும். அவர்களுடைய தொடர்புகளை துண்டித்து எறிய வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஆதரவு தருவது எல்லாவற்றையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.

முக்கியமாக, பாகிஸ்தானில் சில பகுதிகளில் சர்வ வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தீவிரவாதிகளின் முகாம்களைத் தகர்த்தெறிய வேண்டும். நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தி தீவிரவாதிகளைக் கைது செய்து அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக உருமாறிவிடும்!

வைகோ என்றொரு குட்டிக்கருணாநிதி!

தமிழ்நாட்டு அரசியலில் தனிநபர்கள் கட்சி ஆரம்பிப்பதில் ஆச்சர்யமில்லை. அரசியலில் தாக்குப்பிடிப்பதுதான் ஆச்சர்யம். ம.தி.மு.கவின் வரலாறும் வை.கோ என்னும் தனிநபருக்கு கிடைத்த வெற்றி, தோல்வியில்தான் ஆரம்பமாகிறது. தி.மு.க என்னும் குடும்பத்துககுள் இருந்தவரையில் வை.கோ ஒரு குட்டி கருணாநிதி. வெளியேற்றப்பட்டவுடன் எம்.ஜி.ஆரோடு ஒப்பிடப்பட்டவர். எம்.ஜி.ஆருக்கு நல்ல நேரம், டெல்லியின் ஆசி எல்லாமே கூடி வந்தது. வை.கோவுக்கோ எல்லாமே சதி செய்தன.

வை.கோவின் வசீகரம் மட்டுமே ம.தி.மு.கவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. பேச்சுதான் அவருடைய பெரிய பலம். பதினைந்து ஆண்டுகள். ஆறு தேர்தல்கள். அனைத்தையும் தாண்டி கட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கு விட்டமின் எம் வேண்டுமே…1996ல் சொத்துக்கணக்கு பற்றி வை.கோ பேசியதும் இப்போது பேசாமலிருப்பதும் ஞாபகத்திற்கு வருகிறது. வை.கோ பரம்பரை பணக்காரர் என்றெல்லாம் சொன்னாலும் செஞ்சிக்கோட்டை சரிந்து விழுந்த பின்னரும் கட்சியை தாங்குவதுதான் பெரிய ஆச்சர்யம்.

ம.தி.மு.கவை பற்றியும் வை.கோவை பற்றியும் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

- ம.தி.மு.க புத்தகம் பற்றி நூலாசிரியர் ஜெ.ராம்கி.



நூலாசிரியர் ஜெ.ராம்கி தமிழின் முக்கியமான வலைப்பதிவர்களுள் ஒருவர். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Monday, March 16, 2009

123 : அணுவின்றி அமையாது இந்தியா!

ஜெய்சால்மீர். மணலும் மணல் சார்ந்த பிராந்தியமான ராஜஸ்தானின் முக்கியமான பகுதி. அங்கே அதிமுக்கியமான காரியம் ஒன்று யாருக்கும் தெரியாமல் நடந்துகொண்டிருந்தது, யாருக்கும் தெரியாமல். யாருக்கும் என்றால் முக்கியமாக அமெரிக்காவுக்கு. உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன்னுடைய உளவுக்கண்களால் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் செயற்கைக்கோள்களுக்குக்கூடத் தெரியாமல்.

தார் பாலைவனத்தின் மண்ணுக்கு அடியில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிடப்பட்ட ஒரு குழாயில் மூன்று சோதனை அணுகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. என்ன கொழுப்பு பாருங்கள்! வெள்ளை மாளிகை என்பது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வசிக்கும் வீட்டுக்குப் பெயர். உனக்குத் தெரியாமல் உன் வீட்டுக்கு அடியிலேயே நான் அணுகுண்டுச் சோதனை செய்யப்போகிறேன் என்று சவால் விடுக்கும் தோரணை!

‘தாஜ் மஹால்’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு குழாயில் மேலும் இரண்டு சோதனை குண்டுகள்.

சரியாக மாலை 3 மணி 43 நிமிடத்தில், வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மூன்று குண்டுகளும் வெடித்தன.

ஆபரேஷன் சக்தி வெற்றி. இது நடந்தது மே 11, 1998ல்.

இரண்டு நாள்கள் கழித்து, தனியாகப் புதைத்துவைக்கப்பட்ட மேலும் இரண்டு சோதனை குண்டுகளும், மதியம் 12 மணி 21 நிமிடத்தில் வெடித்தன.

மீண்டும் வெற்றி.

0

மே 11, 1998 அன்று முதல் சோதனை முடிந்ததுமே, பிரதமர் வாஜ்பாயி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். மிகச் சுருக்கமாக நடந்தது என்ன என்று விவரித்துவிட்டு, இந்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறினார். நடந்துமுடிந்த சோதனைகள் நன்றாக நடந்தன என்றும், பூமிக்கு அடியில் சோதனை நடந்ததால், கதிர்வீச்சு ஏதும் காற்றுமண்டலத்துக்குப் பரவவில்லை என்றும் கூறினார்.

நாடு முழுதும் முதலில் அதிர்ச்சி பரவியது. பிறகு சந்தோஷம். கொண்டாட்டம். .

மத்திய அமைச்சரவையில் பிரதமர் வாஜ்பாயி, துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி. வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியோருக்கு மட்டுமே முன்கூட்டியே தெரிந்திருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்னதாகக்க்தான் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

*

இத்தனைக்கும், அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அதற்குள் இவ்வளவு தைரியமாக இதனைச் செய்தது ஒரு சாதனைதான்.

ஏன் இவ்வளவு அவசரமும் ரகசியமும்?



MiniMax மூலம் வெளியாகியிருக்கும் '123: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்' என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம் இது. இந்திய அணுசக்தி வளர்ச்சி பற்றி அறிமுகம் செய்வதோடு, இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த தெளிவான புரிதலை வாசகர்களுக்கு வழங்குகிறது இந்தப்புத்தகம்.

நூலை எழுதியிருப்பவர் பத்ரி சேஷாத்ரி. நியூ ஹொரைஸன் மீடியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் பதிப்பாளராக இருக்கும் இவர் தமிழின் முக்கிய வலைப்பதிவர்களுள் ஒருவர். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து வலைப்பதிவுகளில் எழுதிவருபவர்.

ISBN 978-81-8493-030-6 விலை ரூ 25/-

புத்தகத்தை இணையத்தில் வாங்க

கர்ஜிக்கும் புலி!

மே 5, 1976 அன்று புதிய பெயர் உருவானது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள். இயக்கத்துக்கான சின்னத்தை பிரபாகரன் முன்னரே தயார் செய்திருந்தார். இவர் சொல்லச் சொல்ல ஓவியர் ஒருவர் மதுரையில் உருவாக்கித் தந்த சின்னம் அது.

வாயைப் பிளந்து கர்ஜிக்கும் ஒரு புலி. மஞ்சளும் சிவப்பும் பிரதானம். புலியின் வாய் சிவந்திருக்கவேண்டும். ரத்தச் சிவப்பு. எப்போது வேண்டுமானாலும் பாய்வேன் என்று சொல்வது போல் முன்னங்கால்கள் தயாராக இருக்கவேண்டும். பின்னணியில் இரண்டு துப்பாக்கிகள். கேடயத்தில் இரண்டு வாள்களைக் குறுக்காக வைத்திருப்பார்களே, அதுபோல்.

சுற்றிலும் ஒரு வட்டம். வட்டத்தை ஒட்டி சூரிய ஒளிக்கதிர்கள். கதிர்களுக்குப் பதிலாக பாயிண்ட் 33 ரக தோட்டாக்களை சுற்றிலும் அடுக்கவேண்டும். மொத்தத்தில், எழுச்சியூட்டும் சின்னமாக அது அமையவேண்டும்.


- MiniMax மூலமாக வெளியாகியிருக்கும் எல்.டி.டி.ஈ என்ற புத்தகத்தில் இருந்து...


புத்தகத்தை எழுதியவர் மருதன். ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, லெனின், மாவோ, ஸ்டாலின் உள்ளிட்ட பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் இதழில் சர்வதேச அரசியல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

ISBN 978-81-8493-031-3 விலை ரூ 25/-

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க

Saturday, March 14, 2009

மினிமேக்ஸின் முதுகெலும்பு!

மினிமேக்ஸ் வலைத்தளத்தில் அடுத்தடுத்து பல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம். தவிரவும், புத்தகங்கள் பற்றிய வாசகர்களின் கருத்து, விமரிசகர்களின் பார்வை ஆகியவற்றையும் பதிவு செய்ய இருக்கிறோம். புதிய வெளியிடுகள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது இடம்பெற இருக்கின்றன.

நடப்பு நிகழ்வுகள் என்பது மினிமேக்ஸின் முதுகெலும்பு. வெறுமனே தமிழகத்தோடு எங்களுடைய பார்வையைக் குறுக்கிக் கொள்ளாமல் தேசிய அளவில், சர்வதேச அளவில் அனுதினமும் நிகழ்கின்ற சம்பவங்கள், மாற்றங்கள் பற்றிய தகவல்களையும் அதுகுறித்தான கருத்துகளையும் வெளியிட விரும்புகிறோம்.

அதேசமயம், வெறுமனே அரசியலோடு நிறுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை. பொருளாதாரம், வர்த்தகம், விளையாட்டு, மருத்துவம் என்று பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துகளும் இடம்பெறும்.

மேலே இருக்கும் அனைத்துமே ஒவர்நைட்டில் கொண்டுவரப்போவதில்லை. படிப்படியாக. நிதானமாக. எல்லாவற்றையும் விட முக்கியமானது, வாசகர்களின் பங்களிப்பு. நாங்கள் வெளியிடும் புத்தகங்கள் குறித்த உங்களுடைய விமரிசனங்களை, கருத்துகளை உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினால் மிகுந்த மகிழ்ச்சி.

தி.மு.க - சில கேள்விகள்!

இந்திய அளவில் இருக்கும் கட்சிகள் கருவாகி, உருவாகி, வளர்ந்த கதையைச் சுருக்கமாக அறிமுகம் செய்துள்ளோம். கட்சிகளின் கதையில் முதல் புத்தகம் தி.மு.க.


* பெரியார் - அண்ணா இடையே முதல் விரிசல் ஏன் விழுந்தது?

* பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்ததுதான் திமுக உருவானதற்கு நிஜக்காரணமா?

* திராவிடநாடு கோரிக்கையை திமுக ஏன் கைவிட்டது?

* கருணாநிதி முதல்வரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்தாரா?

* வாரிசு அரசியல்தான் வைகோவை வெளியேற்றியதா?


கட்சியின் கதையோடு மேலே இருக்கும் கேள்விகளுக்கும் விடை சொல்கிறது இந்தப்புத்தகம்.

புத்தகத்தை எழுதியவர் ஆர். முத்துக்குமார். கிழக்கு பதிப்பகத்தின் முதன்மைத் துணை ஆசிரியராகவும் MiniMaxன் பொறுப்பாசிரியராகவும் இயங்கிவருகிறார். குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் இதழ்களில் நடப்பு அரசியல் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். அன்புள்ள ஜீவா, இந்திரா, பெரியார் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் எல்லா புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் குறித்த வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க.

Thursday, March 12, 2009

துறைகள் 6 : புத்தகங்கள் 25

அரசியல். தவிர்க்கமுடியாத துறை இது. வரலாறு மற்றும் வாழ்க்கை வரலாறுகளும் அந்த ரகத்தைச் சேர்ந்தவையே. ஆகவே, இந்த மூன்று துறைகளில் இருந்து அவசியமான, முக்கியமான அனைத்து புத்தகங்களையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது மினிமேக்ஸ். தவிரவும், பொருளாதாரம், தீவிரவாதம், வர்த்தகம், நடப்பு நிகழ்வுகள், மருத்துவம் என்று பல்வேறு தலைப்புகளிலும் புத்தகங்கள் மினிமேக்ஸில் இருந்து வெளியாகத் தொடங்கியுள்ளன.

2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் சுமார் இருபத்தைந்து புத்தகங்கள் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அரசியல், வாழ்க்கை வரலாறு, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், தீவிரவாதம், ஆரோக்யம் என்ற ஆறு தலைப்புகளில் இந்த புத்தகங்கள் வெளியாகின. வாசகர்களின் வரவேற்பும் நன்றாகவே இருந்தது. இதுவரை மினிமேக்ஸில் இருந்து என்னென்ன புத்தகங்கள் வெளியாகியுள்ளன என்பதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம், கொஞ்சம் விரிவாகவே.

பதிப்புலகத்துக்குப் புதுவரவு!

நியூ ஹொரைஸன் மீடியா. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டுவரும் நிறுவனம். இதன் தமிழ் பதிப்புகளுள் ஒன்றான 'கிழக்கு பதிப்பகம்' தமிழ் வாசகர்களின் பரவலான கவனத்தையும் நம்பிக்கையையும் பெற்ற பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தில் இருந்து இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல்வேறு துறைகளில் இருந்து வெளியாகியுள்ளன.

கிழக்கு தவிர மேலும் சில பதிப்புககளும் நியூ ஹொரைஸன் மீடியாவில் இயங்கின்றன. 'வரம்', 'நலம்', 'தவம்', 'Prodigy' என்ற வரிசையில் தற்போது புதிய வரவாக வந்துள்ளது MiniMax.

க்ரெளன் சைஸில் எண்பது பக்க அளவில் அறிமுகமாகியிருக்கும் மினிமேக்ஸ் நூல்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகின்றன?

அடுத்த பதிவில்.

இந்தியாவின் தலையெழுத்து யார் கையில்?

நாட்டையே உலுக்கியெடுக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அதைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன. ஒளி ஊடகங்களில் முதல் பதினைந்து நிமிடங்களைப் பிடித்துக் கொள்கின்றன. இதெல்லாம் எத்தனை நாளைக்கு? இரண்டு நாள். மூன்று நாள். மிஞ்சிப் போனால் ஒரு வாரம். பிறகு அது விஷயமாக ஏதேனும் பரபரப்பான சங்கதிகள் வெளியே வந்தால் மீண்டும் அது தொடர்பான செய்திகளைப் பார்க்கமுடியும். இல்லாவிட்டாதல் அத்தோடு தீர்ந்தது கதை.

அந்தச் சம்பவம் ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? அதன் சாதக, பாதகங்கள் என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் முழுமையான, நியாயமான, ஆதாரபூர்வமான பதிவுகள் எதுவுமே வருவதில்லை. இது அச்சு ஊடகம், ஒளி ஊடகம் எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஆழ்ந்து அலச விருப்பமில்லாமல் பரபரப்புக்காக வெறும் நுனிப்புல் மேய்வதில் எல்லோருமே ஆர்வம் செலுத்தினால் நிஜமான, முழுமையான பதிவுகளை யார் செய்வது?

0

இந்தியாவின் தலையெழுத்து யார் கையில் இருக்கிறது? வாக்காளர்கள் கைகளிலா? இல்லை. நீங்கள் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும் இந்தியாவின் எதிர்காலம் அரசியல் கட்சிகளின் கைகளில்தான் இருக்கிறது. எனில், அந்த அரசியல் கட்சிகளின் வரலாறு என்ன? அவர்களுடைய சித்தாந்தங்கள் என்ன? குறிக்கோள்கள் என்ன? இதுபோன்ற விஷயங்களுக்கு ஏதேனும் பதிவுகள் இருக்கின்றனவா என்று தேடினால் நிறைய தென்படுகின்றன. இங்குதான் சிக்கலும் தட்டுப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் வரலாறு என்பது அந்தந்த கட்சியைச் சேர்ந்த அபிமானிகள் அல்லது அனுதாபிகளால் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய உள்மனத்தின் கட்டளைகளுக்கு ஏற்பவே வரலாறைப் பதிவு செய்யவேண்டிய நிர்பந்தம் அவருக்கு. விளைவு, நியாயமான, முழுமையான வரலாறு என்பது வாசகனுக்குக் கிடைக்காமலேயே போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனில், அப்படிப்பட்ட பதிவுகளை யார் செய்யப்போகிறார்கள்?