ஆர். முத்துக்குமார்
அமெரிக்காவுக்கு இரண்டாவது முறையாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது வட கொரியா. கடந்தமுறை பயன்படுத்திய அதே டெக்னிக். அணுகுண்டு. மே 25, 2009அன்று வட கொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனை அமெரிக்காவை மட்டுமல்ல, அணு ஆயுத நாடுகளான ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அனைத்துயுமே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நானும் ஒரு வல்லரசு என்று பெருமிதம் பொங்கச் சொல்லிக்கொள்வதில் எல்லா வளரும் நாடுகளுக்குமே ஆர்வம் அதிகம். ஒரு நாடு அந்தஸ்து என்ற கோணத்தில் பார்க்கும். இன்னொரு நாடு எதிரிகளுக்கு விடும் மிரட்டலாகப் பார்க்கும். இன்னொரு நாடு தற்காப்பு என்ற அளவில் பார்க்கும். வட கொரியாவுக்கும் அந்த ஆசை உண்டு. தப்புப்தப்பு. அவர்களுக்கு அது ஒரு கனவு.
உண்மையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு முன்பிருந்தே அணுஆயுத தயாரிப்பு முயற்சியில் வடகொரியா இறங்கிய தேசம். ஆனால் அது அத்தனை சுலபத்தில் கைக்கூடி வரவில்லை. காரணம், கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாகத் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்த வட கொரியாவுக்கு வெற்றி கிடைத்தது 2006ல்தான்.
தொழில்நுட்பம் தயார். ஆள்கள் தயார். இடம் தயார். வட கொரியாவின் வடக்கு பகுதியில் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள கில்ஜூ நகருக்கு அருகே உள்ள ஹவதேரி என்ற இடம். எல்லாம் தயார். சோதனை மட்டும்தான் பாக்கி. நவம்பர் 2006ல் அணுகுண்டுச் சோதனை நடத்தப்பட்டது. பூமிக்கு அடியில் வைத்து நடத்தப்பட்ட அணு குண்டு சோதனை, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளை மட்டுமல்ல, வடகொரியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் வியர்த்து விறுவிறுக்க வைத்துவிட்டது.
வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டது அமெரிக்கா. யாரைக் கேட்டு சோதனை செய்தீர்கள்? எத்தனை தைரியம் உங்களுக்கு? அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது மறந்துவிட்டதா?. அமெரிக்காவின் வழியில் இந்தியா உள்ளிட்ட பல தேசங்களும் வட கொரியாவை நிற்கவைத்துக் கேள்வி கேட்டன.
எல்லோரும் பதறியடித்துக் கேள்விகேட்டபோது, ‘நுறு சதவீத உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்டது இந்த அணுகுண்டுச் சோதனை. கொரிய தீபகற்க பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அமைதியை நிலை நாட்டவே இது நடத்தப்பட்டுள்ளது' என்று நிறுத்தி நிதானமாக விளக்கம் கொடுத்தது வடகொரியா.
தக்க பாடம் புகட்டியாகவேண்டும் என்று முடிவெடுத்தது அமெரிக்கா. ஆகட்டும் என்று தலையசைந்தது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில். உடனடியாக வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு வட கொரியா மற்றும் தங்களைத் தவிர வேறு யாரும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாது என்று நினைக்கும் அத்தனை நாடுகளும் ஆமாம் சாமி போட்டன. தவிரவும், இனி எந்தவித அணு ஆயுதச் சோதனைகளையும் வட கொரியா செய்யக்கூடாது என்று கெடுபிடிகள் போடப்பட்டன.
பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் நாடு மோசமான நிலைக்குச் சென்றுவிடும் என்பதால் இனி வடகொரியா அடக்கி வாசிக்கும் என்பதுதான் சம்பந்தப்பட்ட நாடுகளின் கணிப்பு. ஆனால் நான் எதற்கும் துணிந்தவன் என்ற சொல்லும் வகையில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வடகொரியா.
பூமிக்கடியில் நடத்தப்பட்ட இந்த அணுகுண்டு சோதனையின்போதுன் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவுக்கு பூகம்ப அதிர்வை உணர்ந்ததாக அறிவித்தது வடகொரிய வானிலை மையம். கடந்த 2006 சோதனை நடத்தப்பட்ட அணுகுண்டைக் காட்டிலும் இது வீரியமிக்கது என்று அறிவித்துள்ளது வடகொரியா. ஆனால் சோதனை நடத்தப்பட்ட இடம் பற்றி எந்தவித தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
உண்மையில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ராக்கெட் சோதனை நிகழ்த்தியது வட கொரியா. அடுத்து அணுகுண்டு சோதனை நடத்தப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பாக அமைந்தது. ராக்கெட் சோதனை பெயரில் அணுகுண்டு ஏவுகணைகளை சோதனை செய்து பார்க்கிறது என்று குற்றம்சாட்டின மற்ற நாடுகள். தவிரவும், அணுகுண்டுச் சோதனைக்கு எதிர்ப்பும் விதித்தன.
எதிர்ப்புகளைப் பற்றி வட கொரியா துளியும் அலட்டிக்கொள்ளவில்லை. என் பணி அணுச்சோதனைந் நடத்துவதே என்று சொல்லிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்திய வடகொரியா, அதற்கு அடுத்த மூன்று நாள்களும் குறைந்த தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. பார்த்தீர்களா? நாங்கள் சொன்னது நடந்துவிட்டது. இதற்குத்தான் கடிவாளம் போடவேண்டும் என்று சொன்னோம் என்று அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு பேசின அணுஆயுத நாடுகள்.
ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏவுகணை தயாரிப்பு உத்திகளை விற்றிருக்கும் வட கொரியா, அடுத்து சிரியா, ஏமன். லிபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கும் விற்றுள்ளது என்பது அமெரிக்காவின் பகிரங்கக் குற்றச்சாட்டு. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நாடுகள் இருக்கும் பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளது என்று அலறுகின்றன மற்ற நாடுகள்.
அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்த அணுகுண்டு சோதனை என்பது இந்தியாவின் கவலை. ஆனால் சர்வதேச நாடுகளுக்கு நேரடியாக சவால்விடும் வகையில் இருக்கிறது இந்த அணுகுண்டுச் சோதானை என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வட கொரியாவுக்கு ஆயுதம் ஏற்றிவரும் கப்பல்களை தடுத்து நிறுத்துவோம் என்று கூறியுள்ளார். அப்படித் தடுக்கும் பட்சத்தல் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். தாக்குதல் நிச்சயம் என்று கூறியிருக்கிறது வடகொரியா!
Thursday, June 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment