Tuesday, April 21, 2009

பிரதமர் பிரகாஷ் காரத்?!

ஆர். முத்துக்குமார்

சரித்திரத் தவறு என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இடதுசாரிகள். 1996ல் பிரதமர் பதவியை ஏற்காமல் விட்டது அவர்களுக்குள் இன்னமும் நீருபூத்த நெருப்பாகவே இருக்கிறது. 1996 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் விநோதமாக இருந்தன. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கும் கிடைக்கவில்லை. எஞ்சியிருந்தவை இடது சாரிகள், ஜனதா தளம் மற்றும் சில பிராந்தியக் கட்சிகள். காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்கும் பணியில் இடதுசாரிகளும் ஜனதா தளத்தினரும் இறங்கினார்கள்.

ஜனதா தளம். சி.பி.எம், சி.பி.ஐ, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தி.மு.க, த.மா.கா, ஃபார்வர்டு ப்ளாக், அசாம் கன பரிஷத் எல்லோருமாகச் சேர்ந்து ஐக்கிய மொத்தம் 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி உருவாக்கினர். மொத்தம் 187 எம்.பிக்கள் தேறியிருந்தனர்.

யாரைப் பிரதமராக்குவது? இடதுசாரிகள் தவிர்த்த அத்தனைபேரும் ஜோதிபாசுவை நோக்கியே கைநீட்டினார்கள். அவரும் தலையசைத்துவிட்டார். சி.பி.எம்மில் இருந்தவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. உடனடியாக மத்தியக்குழுவில் விவாதிக்கவேண்டும் என்றனர். ஆளுக்கொரு கருத்து. சிலர் எதிர்த்தனர். சிலர் மறுத்தனர். சிலர் வரவேற்றுப் பேசினர். ஒத்தக்கருத்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

மத்திய அரசில் பங்கே தேவையில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலே போதுமானது என்று சொல்லிவிட்டது மத்தியக்குழு. உண்மையில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு ஜோதிபாசுவைப் பிரதமராக்குவதில் விருப்பம் இருந்தது. ஆனாலும் மத்தியக்குழு நிராகரித்துவிட்டதால் ஐக்கிய முன்னணிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

‘வாய்ப்பே இல்லை. நீங்கள்தான் பிரதமர். உங்கள் தலைமையில்தான் ஆட்சி’

திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள். தர்ம சங்கடத்தில் நெளிந்த சி.பி.எம் வேறு வழியில்லாமல் மீண்டும் மத்தியக்குழுவைக் கூட்டியது. வாதம். பிரதிவாதம். நீண்ட நெடிய இழுவைப்பிறகு அதே பல்லவி. புதிய ராகத்தில்.

‘காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசு அமைக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. அந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதே போதுமானது என்று கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது’

வேறு வழியில்லாமல் பிரதமர் வேட்டை நடத்தியது ஐக்கிய முன்னணி. மூப்பனார் பெயரைக்கூடப் பரிசீலித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டம் தேவே கௌடாவுக்கு அடித்தது. பிரதமரானார்.

கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.எம்க்குப் பிரதமர் ஆசை வந்திருக்கிறது. ஒருவேளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவி சி.பி.எம்முக்குக் கிடைக்கும் பட்சத்தில் அதை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருக்கிறார் சி.பி.எம்மின் சீதாராம் யெச்சூரி. அத்வானி, மன்மோகன் சிங், மாயாவதி, சரத்பவார், ஜெயலலிதா, பிரகாஷ் காரத்.. அடுத்தது யாருப்பா?

எல்லாம் சரி, ஒருவேளை தோழர் ஒருவர் பிரதமர் ஆகிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘நீங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருந்து விலகுகிறீர்கள் என்று இடதுசாரி அரசுக்கு ஆதரவு தருபவர்கள் கேட்கலாமா? ஆதரவு மறுபரிசீலனை போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்களா? ஏனென்றால் சில வார்த்தைகள் அவர்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்டவை என்பது போல நடந்து கொள்வார்கள். சரி, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்!

No comments: