Saturday, April 18, 2009

ஐ.பி.எல் முதல் போட்டி - முழுவிவரம்

ஆர். முத்துக்குமார்

தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கிவிட்டது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட். எல்லா அணிகளும் பல புதிய வீரர்களை வாங்கியுள்ளன. கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் போன்ற அசகாய சூரர்கள் இப்போது ஐ.பி.எல் முகாமுக்குள் நுழைந்துள்ளார்கள்.

முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே. சென்னை அணிக்குத் தலைவர் மகேந்திர சிங் தோனி. மும்பைக்கு சச்சின் டெண்டுல்கர்.

டாஸில் வென்றவர் சென்னையின் தோனி. தன்னுடைய அணி முதலில் பந்துவீசும் என்றார். நன்றாகவே வீசியது. மும்பை வீரர்கள் ஒன்றும் வானவேடிக்கை எல்லாம் நிகழ்த்த முடியவில்லை. அடக்கித்தான் வாசிக்க முடிந்தது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். நாலு ஓவருக்கு நாற்பத்தி நான்கு. கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜோகிந்தர் சர்மா நான்கு ஓவர்களையும் நன்றாகவே வீசினார். மொத்தம் இருபத்தைந்து ரன்களை விட்டுக்கொடுத்தார்.

மும்பை அணித்தலைவர் சச்சின் தொடக்கத்தில் இருந்தே நிதானம் காட்டினார். 49 பந்துகளில் 59 ரன்கள். நிதானமாக ஆடிவந்த அணிக்கு உடுக்கை அடித்து உசுப்பேற்றியவர் நாயர். ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையை ஏற்படுத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை இந்தியன்ஸ் இருபது ஓவர்களில் 165 ரன்கள்.

ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற முடிவில் களத்துக்கு வந்தனர் சென்னை அணியினர். வந்த வேகத்தில் இரண்டு விக்கெட்டுகள். ஃப்ளிண்டாஃப் மாயாஜாலம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்த்தனர். ம்ஹூம். கால் சதத்துக்கு முன்பே பெவிலியனுக்குப் போய்விட்டார்.

ஹெய்டன் சாதிப்பார் என்று நினைத்தால் அவரும் 44 ரன்களுடன் கிளம்பிவிட்டார். முடிந்தவரை முயல்வது என்ற எண்ணத்தில் கேப்டன் தோனி ஆடினார். 36 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அவருடைய விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது. இருபது ஓவர்கள் முடியும்போது சென்னை அணியின் ஸ்கோர் 146.

சென்னை அணியை தோல்வியடையச் செய்ததில் மும்பை அணியில் மலிங்காவுக்கு முக்கியப்பங்கு உண்டு. நான்கு ஓவர்கள் பந்துவீசி பதினைந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், நிதானமாக ஆடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொடுத்த சச்சின் டெண்டுல்கருக்குத்தான் ஆட்டநாயகன் விருது.

2 comments:

Anonymous said...

http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

ரங்குடு said...

தென் ஆப்பிரிக்காவில் போட்டி நடத்தப் படுவதால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு நன்மையும் இல்லை.
ஐ.பி.எல் நமது நாட்டிற்கு உதவாத போட்டிகளை நடத்துவதால் தங்களையும், சில கிரிக்கெட் ஆட்டக் காரர்களையும் இந்திய மக்களின் பணத்தில் மேலும் பணக்காரர்களக்கிக் கொண்டிருக்கிறது.

ச்சீர் லீடிங் அழகிகளை நேரில் பார்த்தால் தான் கிக். ஜோடி போட்டுக்கொண்டு டி.வி பார்த்தால் நேரில் பார்த்த கிக் வராது.

இந்த ஒன்றுக்கும் உதவாத போட்டிகள் முழு தோல்வி அடைய என் வாழ்த்துக்கள்.

தீவிர வாதத்திற்கு பயந்து போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றினால் நாம் தீவிர வாதத்திற்கு பணிந்து விட்டதாகத்தானே பொருள்?