Wednesday, March 18, 2009

பாகிஸ்தானும் தீவிரவாதமும்!

ஆர். முத்துக்குமார்

மற்ற எந்தப் பிரச்னையைக் காட்டிலும் தீவிரவாதிகளின் பிரச்னைதான் பாகிஸ்தானுக்கான மிகப்பெரிய தலைவலி. அது எத்தனை உக்கிரமானது என்பதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ஆகப்பெரிய உதாரணம். விஷயம் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

1947ல் காஷ்மீரை முன்னிலைப்படுத்தி முதல் யுத்தத்தைத் தொடங்கியபோது தமது ராணுவத்தினரைக்கூட பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நம்பவில்லை. அவர்கள் நம்பியது பாகிஸ்தான் எல்லையோரத்தில் திரிந்துகொண்டிருந்த பதான் ஆதிவாசிகளைத்தான் கூலிக்கு எடுத்து காஷ்மீருக்குள் அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எல்லாம் வழங்கி காஷ்மீரைக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள்.

ஆனால் அந்த முயற்சிகளை நேரு, மௌண்ட்பேட்டன் உள்ளிட்டோர் புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்தி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டதோடு பதான் தீவிரவாதிகளையும் ஓட ஓட விரட்டி அடித்தனர். பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் தீவிரவாதிகளுக்குமான உறவின் முதல் அத்தியாயம் 1947 யுத்தம்தான். அதன்பிறகு பாகிஸ்தானுக்கென்று பிரத்யேகமாக உளவு அமைப்பு ஒன்று உருவானது. பெயர், ஐ.எஸ்.ஐ.

உளவு செய்வதுதான் இதன் வேலை என்றாலும்கூட ஐ.எஸ்.ஐக்கு அதிகம் பிடித்தமான வேலை தீவிரவாதிகளுக்குக் கொம்பு சீவி விடுவதுதான். ஆப்கனிஸ்தானில் இருக்கும் முஜாஹிதீன்கள், தாலிபன்கள் என்று என்னென்ன பெயர் தீவிரவாதிகள் செயல்படுகிறார்களோ அவர்களை எல்லாம் அழைத்து வந்து, முறைப்படி ஆயுதப்பயிற்சிகள் கொடுத்து அவர்களை தீவிரவாதச் செயல்களுக்குத் தூண்டுவது ஐ.எஸ்.ஐயின் பிரதானப் பணி.

ஆயுதம் வேண்டும். பணம் வேண்டும். சொகுசாகத் தங்க இடம் வேண்டும் என்று தீவிரவாத இயக்கங்கள் என்ன கேட்டாலும் தயங்காமல் கொடுத்தது ஐ.எஸ்.ஐ. இதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காலால் இடும் உத்தரவுகளைத் தலையால் செய்து முடிக்கத் தயாராக இருந்தனர் தீவிரவாதிகள். 1965ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற யுத்தத்துக்குப் பிள்ளையார்சுழி போட்டது இந்தத் தீவிரவாதிகள்தான்.

இந்தியாவின் கட்ச் வளைகுடாப் பகுதிக்கு தீவிரவாதிகளை அனுப்பி அங்கே குழப்பங்களை விளைவித்தது. ராணுவம் கட்ச் பக்கம் பார்வையைத் திருப்பும்போது காஷ்மீருக்குள் கால் பதிக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் திட்டம். காஷ்மீருக்குள் ஓசையின்றி ஊடுருவி அங்கேயே தங்கி, கலகத்தை ஏற்படுத்தவேண்டும். பிறகு மெல்ல மெல்ல ராணுவத்தினரை காஷ்மீருக்குள் அனுப்பி யுத்தம் நடத்தி காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்பது அவர்கள் போட்ட கணக்கு. அப்போது காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பிய தீவிரவாதிகளுக்கு ஆஸாத் காஷ்மீர் போராளிகள் என்று பெயர் வைத்துக்கொண்டனர்.

ஆஸாத் காஷ்மீர் போராளிகளை முதலில் அனுப்பிவிட்டு, பிறகுதான் பாகிஸ்தான் ராணுவத்தினர் களத்தில் இறங்கினர். பலநாள்கள் நடந்த யுத்தத்தில் இறுதி வெற்றி இந்தியாவுக்குத்தான். மீண்டும் தீவிரவாதிகளின் பங்களிப்பு பல்லிளித்தது. தொடர்ந்து தோல்வியையே தந்து வந்தாலும் முஜாஹிதீன்களையும் ஆஸாத் காஷ்மீர் போராளிகளையும் தொடர்ந்து நட்பு வட்டத்திலேயே வைத்திருந்தனர் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.

இந்தியாவை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை இந்தியாவின் முக்கியப்பிரிவுகளுக்கு ஊடுருவச் செய்து அவ்வப்போது குழப்பம் விளைவித்தது. முக்கியமாக், இந்தியாவில் காலிஸ்தான் போராளிகள் குடைச்சல் கொடுத்தபோது அவர்களை ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் சந்தித்து மூளைச்சலவை செய்து இந்தியாவுக்குள் சிக்கல் ஏற்படுத்த முனைந்தனர். பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் தீவிரவாதிகள் மீதான் காதல் எதுவரை சென்றது தெரியுமா?

எழுபதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கனிஸ்தானை ஆக்ரமித்தபோது அவர்களை எதிர்த்துப் போராட ஆப்கன் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து யுத்தத்துக்கு அனுப்பியது ஐ.எஸ்.ஐ. அதன்பிறகு காஷ்மீரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்
லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷே முகமது, ஜமா இஸ்லாமியா , ஹிஸ்புல் முஜாஹிதீன் என்று
பல தீவிரவாத இயங்களுக்கு நிரந்தரப் புரவலராக செயல்படுவது ஐ.எஸ்.ஐதான்.

எண்பதுகளில் தொடங்கி முஷார்ஃப், சர்தாரி காலம் வரை தொடர்ந்து தீவிரவாதிகளுக்குத் தங்கள் நேசக்கரங்களை அலுக்காமல் சலுக்காமல் நீட்டி வருகிறது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்பது கூரான இருமுனைகளைக் கொண்ட கத்தி போன்றது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அது கையாள்பவரையே தாக்கும் ஆபத்து இருக்கிறது. தற்போது பாகிஸ்தானின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, ஆப்கனிஸ்தான் தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது வெளிப்பட்டிருக்கிறது. தற்போது உருவாகி இருக்கும் சூழல் மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தான் என்ற தேசத்தையே கபளீகரம் செய்து விடுவதற்கு எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.

இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் அரசியல்வாதிகள், உளவு அதிகாரிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் தாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நேசிக்கும் தீவிரவாதிகளை உதறித்தள்ள வேண்டும். அவர்களுடைய தொடர்புகளை துண்டித்து எறிய வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஆதரவு தருவது எல்லாவற்றையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.

முக்கியமாக, பாகிஸ்தானில் சில பகுதிகளில் சர்வ வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தீவிரவாதிகளின் முகாம்களைத் தகர்த்தெறிய வேண்டும். நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தி தீவிரவாதிகளைக் கைது செய்து அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக உருமாறிவிடும்!

No comments: