Monday, March 16, 2009

123 : அணுவின்றி அமையாது இந்தியா!

ஜெய்சால்மீர். மணலும் மணல் சார்ந்த பிராந்தியமான ராஜஸ்தானின் முக்கியமான பகுதி. அங்கே அதிமுக்கியமான காரியம் ஒன்று யாருக்கும் தெரியாமல் நடந்துகொண்டிருந்தது, யாருக்கும் தெரியாமல். யாருக்கும் என்றால் முக்கியமாக அமெரிக்காவுக்கு. உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன்னுடைய உளவுக்கண்களால் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் செயற்கைக்கோள்களுக்குக்கூடத் தெரியாமல்.

தார் பாலைவனத்தின் மண்ணுக்கு அடியில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிடப்பட்ட ஒரு குழாயில் மூன்று சோதனை அணுகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. என்ன கொழுப்பு பாருங்கள்! வெள்ளை மாளிகை என்பது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வசிக்கும் வீட்டுக்குப் பெயர். உனக்குத் தெரியாமல் உன் வீட்டுக்கு அடியிலேயே நான் அணுகுண்டுச் சோதனை செய்யப்போகிறேன் என்று சவால் விடுக்கும் தோரணை!

‘தாஜ் மஹால்’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு குழாயில் மேலும் இரண்டு சோதனை குண்டுகள்.

சரியாக மாலை 3 மணி 43 நிமிடத்தில், வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மூன்று குண்டுகளும் வெடித்தன.

ஆபரேஷன் சக்தி வெற்றி. இது நடந்தது மே 11, 1998ல்.

இரண்டு நாள்கள் கழித்து, தனியாகப் புதைத்துவைக்கப்பட்ட மேலும் இரண்டு சோதனை குண்டுகளும், மதியம் 12 மணி 21 நிமிடத்தில் வெடித்தன.

மீண்டும் வெற்றி.

0

மே 11, 1998 அன்று முதல் சோதனை முடிந்ததுமே, பிரதமர் வாஜ்பாயி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். மிகச் சுருக்கமாக நடந்தது என்ன என்று விவரித்துவிட்டு, இந்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறினார். நடந்துமுடிந்த சோதனைகள் நன்றாக நடந்தன என்றும், பூமிக்கு அடியில் சோதனை நடந்ததால், கதிர்வீச்சு ஏதும் காற்றுமண்டலத்துக்குப் பரவவில்லை என்றும் கூறினார்.

நாடு முழுதும் முதலில் அதிர்ச்சி பரவியது. பிறகு சந்தோஷம். கொண்டாட்டம். .

மத்திய அமைச்சரவையில் பிரதமர் வாஜ்பாயி, துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி. வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியோருக்கு மட்டுமே முன்கூட்டியே தெரிந்திருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்னதாகக்க்தான் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

*

இத்தனைக்கும், அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அதற்குள் இவ்வளவு தைரியமாக இதனைச் செய்தது ஒரு சாதனைதான்.

ஏன் இவ்வளவு அவசரமும் ரகசியமும்?



MiniMax மூலம் வெளியாகியிருக்கும் '123: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்' என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம் இது. இந்திய அணுசக்தி வளர்ச்சி பற்றி அறிமுகம் செய்வதோடு, இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த தெளிவான புரிதலை வாசகர்களுக்கு வழங்குகிறது இந்தப்புத்தகம்.

நூலை எழுதியிருப்பவர் பத்ரி சேஷாத்ரி. நியூ ஹொரைஸன் மீடியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் பதிப்பாளராக இருக்கும் இவர் தமிழின் முக்கிய வலைப்பதிவர்களுள் ஒருவர். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து வலைப்பதிவுகளில் எழுதிவருபவர்.

ISBN 978-81-8493-030-6 விலை ரூ 25/-

புத்தகத்தை இணையத்தில் வாங்க

No comments: