Saturday, March 28, 2009

79 பக்கங்களில் ஒரு சவால் - அ. குமரேசன்

உங்களுடைய ‘அ.தி.மு.க.’ புத்தகம் படித்தேன். அது தொடர்பான சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பவர்களுக்கு அரசியல் கட்சிகள் பற்றித் தெரிந்துகொள்ளும் தூண்டுதலை அளிப்பதில் உங்கள் புத்தகம் வெற்றிபெறுகிறது. அரசியல் அக்கறை இருந்தாலும் போதிய தகவல் ஞானமின்றி தற்போதைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு முழுமையான பார்வையை வளர்த்துக்கொள்ளும் முனைப்பை நிச்சயமாக இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. ஒரே வாசிப்பில் புத்தகத்தை முடிக்கத் தூண்டுகிற எளிய, விறுவிறுவென்ற, சுவாரசியமான அடுக்கு நடை முக்கியமான பலம். புத்தக வாசிப்பிலிருந்தே நழுவிக் கிடப்போருக்கும் ஆர்வத்தைத் தூண்டுவது இது. அவ்வகையில் இது ஒரு சேவை.

சில எழுத்துக் குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக, புத்தகத் தலைப்பிலேயே ‘ அ.தி.மு.க ’ என்று, முதல் மூன்று எழுத்துக்களை அடுத்துப் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கடைசி எழுத்தாகிய ‘க’ அப்படிப் புள்ளியோடு முடியாமல் நிற்கிறது. ஒன்று, கடைசியில் வரும் ‘க’ என்ற எழுத்துக்கும் புள்ளி வைத்திருக்க வேண்டும். அல்லது, அந்தப் புள்ளிகளே இல்லாமல் அதிமுக என்றே எழுதலாம். பத்திரிகைகளில் திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக, சிபிஐ(எம்எல்) என்று எழுத்தையடுத்த புள்ளி இல்லாமல்தான் எழுதுகிறார்கள்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பின், அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது (பின்னர் அது நீதிமன்றத்தில் போய் சிக்கிக்கொண்டது), மிக மிகச் சாதாரணமானவர்களை அமைச்சர்காளாக்கியது, தொடக்க ஆண்டுகளில் மேல்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்தியது போன்ற நடவடிக்கைகளும் எம்ஜிஆர் பற்றிக் குறிப்பிடப்பட வேண்டியவை. பொதுவாகவே அவரிடத்தில் மற்றவர்களுக்கு உதவிடும் குணம் இருந்தது என்பதும் ஒரு அடிப்படையான பலம்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அவர் எப்படி எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியின் தலைவர் தான்தான் என்பதை நிறுவினார் என்ற பின்னணியை சரியாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியொரு கட்சியின் சூழலில் தலைமையிடத்தைப் பிடிக்கிற போராட்டத்தில் பெரும் வெற்றிபெற்றவர் அவர். ஒரு பெண் என்ற வகையில் இது ஒரு சாதனையும் கூட.

அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் சில ஆளுமைகளும் குறிப்பிடத்தக்கவை. மாநிலம் முழுவதும் நிலவிய குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளித்தது; தமிழர் விரோதி என முத்திரை குத்தப்படும் என்று தெரிந்தும் விடுதலைப் புலிகள் பற்றிய தம் கருத்தை வெளிப்படுத்தியது; காஞ்சி சங்கராச்சாரிகள் கைது; அகில இந்திய அரசியலில் தலையீடு...இப்படி நிறைய இருக்கின்றன.

அவரது சில எதிர்மறை அம்சங்களும் குறிப்பிடப்படவேண்டியவை: கட்சிக்குள் ஜனநாயகமின்மை, போட்டி இந்துத்வா கட்சி போல் நடந்துகொண்டது, அயோத்தி மசூதி இடிப்புக்கு ஆதரவு, கரசேவைக்கு ஆள் அனுப்பியது, பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்கச் செய்தது ...

-இப்படிப்பட்ட தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தால் புத்தகம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.
அதே நேரத்தில், 79 பக்கங்களுக்குள் எழுதியாக வேண்டிய வரம்புக்குள் செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். முழுமையான முழுமை என்பது எவருக்கும் ஒரு பெரிய சவால்தான். முழுமையாக சாத்தியமாகாத சவால். எனக்கும்தான்.

புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற பல தகவல்கள் எனக்கு அதைப் படிப்பதற்கு முன் தெரியாது. அந்தத் தகவல்களை சேகரிப்பதற்கு நீங்கள் சிரத்தையோடு முயன்றதால்தான் இந்தப் புத்தகம் முதலில் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆயினும் ஊடகவியலாளர் என்ற முறையில், எழுத்தாளர் என்ற முறையில் நமக்கேது முழு திருப்தி?
அடுத்தடுத்த புத்தகங்களில் மேலும் மேலும் ஆழம் காண வாழ்த்துக்கள்.

அன்புடன்-
அ. குமரேசன்

0

'கட்சிகளின் கதை' வரிசையில் மினிமேக்ஸ் மூலம் வெளியாகியுள்ள 'அ.தி.மு.க' புத்தகம் குறித்து பத்திரிகையாளர், தீக்கதிர் இதழின் தலைமைச் செய்தியாளர், ஊடக விமரிசகர் அ. குமரேசன் அவர்களின் பார்வை இது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

No comments: