ஆர். முத்துக்குமார்
வருத்தங்களைக் காட்டிலும் சந்தேகங்களே அதிகமாக இருக்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல்கள் வருவது நின்றுபோய் ஏறக்குறைய இருபத்திமூன்று மணி நேர மெகா தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடலை மீட்டெடுத்துள்ளது இந்திய ராணுவம். கூடவே, அவருடன் பயணம் செய்த பைலட்டுகள் உள்ளிட்ட நால்வரின் உடல்களும். பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை. ஆந்திரமக்களுக்கு. ரெட்டி குடும்பத்துக்கு. முக்கியமாக, காங்கிரஸ் கட்சிக்கு.
ஆந்திராவுக்காக நிறைய கனவுகளை சுமந்து கொண்டிருந்த மனிதர் அவர். மாநிலத்தில் இருக்கும் எல்லா பிரச்னைகளையும் ஒவ்வொன்றாகத் தீர்க்கவேண்டும். குறிப்பாக, தெலுங்கானா மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னைகளைத் துடைத்தெறியவேண்டும் என்பது அவருடைய திட்டம். ஆட்சிக்கு வந்ததும் நக்சலைட்டுகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பலன் ஒன்றும் பெரிதாகக் கிட்டவில்லை. இருந்தும் தொடர் முயற்சியில் ஈடுபட்டார்.
மக்கள் நலத்திட்டங்களில் ரெட்டிக்கு நாட்டம் அதிகம். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களே அவரைத் தொடர் வெற்றியாளராக வைத்திருந்தன. நான் அறிவிக்கும் திட்டங்கள் கிராமங்களுக்கு முறையாகச் செல்கின்றனவா என்று ஆய்வுசெய்யப் போகிறேன் என்று சொன்னவர், செப்டெம்பர் 2, 2009 புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கர்நூலுக்குப் புறப்படுவதற்கு முன்னால், ‘வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக இனி ஒவ்வொரு கிராமத்துக்கும் பயணம் செல்ல இருக்கிறேன்.' என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டுத்தான் ஹெலிகாப்டரில் ஏறினார்.
காலை எட்டு முப்பத்தைந்துக்கு பெல் 430 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்ட முதல்வர் ரெட்டியுடன் அவருடைய முதன்மை செயலாளர் சுப்ரமணியம் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி ஆகியோரும் இருந்தனர். க்ரூப் கேப்டன் எஸ்.கே. பாட்டியா மற்றும் கேப்டன் எம்.எஸ். ரெட்டி ஆகிய பைலட்டுளைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட ஒருமணி நேரம் வரை ஹைதரபாத்தில் இருக்கும் பெகும்பேட் விமான நிலையத்துக்கு சிக்னல்கள் அனுப்பிக் கொண்டிருந்தது.
திடுமென 9.45க்கு சிக்னல்கள் தடைபட்டன. என்ன ஆயிற்று? விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். பத்தே முக்காலுக்கு சித்தூரில் இறங்கவேண்டிய ஹெலிகாப்டர் வந்து சேராததால் அங்கிருந்த அரசு அதிகாரிகள் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறினர். வயர்லெஸ், மொபைல், சேட்டிலைட் மொபைல் என்று அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி முதலமைச்சர் மற்றும் அவருடன் சென்றவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றிலும் தோல்வியே மிஞ்சியது.
புறப்பட்டு ஒரு மணி நேரமே ஆகியிருந்தால் அநேகமாக ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்துக்கு அருகே சென்று கொண்டிருக்கலாம் என்று கருதிய அதிகாரிகள், பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக தகவல் தொடர்புக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நினைத்தனர். நேரம் செல்லச் செல்ல அதிகாரிகளுக்கு இருந்த பதற்றம், பயமாக உருவெடுத்தது.
ஒருவேளை மோசமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு செல்ல முடியாமல் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் தரையிறங்கி இருக்கக்கூடும் என்று நம்பிய அதிகாரிகள், அதையே செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவ்வளவுதான். மறுநொடியே செய்திக்கு பரபரப்பு சாயம் பூசப்பட்டது.
ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கலாம் என்று கருதப்படும் அடர்ந்த வனப்பகுதி நக்சலைட்டுகள் செல்வாக்குள்ள பகுதி. ஆகவே, ஹெலிகாப்டரில் இருந்த முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் நக்சலைட்டுகளின் பிடியில் சிக்கியிருக்கக்கூடும் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கினர். குறிப்பாக, ஆங்கில ஊடகங்கள் இந்தக் கருத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின.
உடனடியாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டு, நல்லேமல்லா வனப்பகுதிக்கு மேலே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. விஷயத்தின் வீரியம் கருதி மத்திய அரசும் களத்தில் இறங்கியது. இந்திய வான்படைக்குச் சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கின. குறைந்த உயரமே பறக்கக்கூடிய ஹெலிகாப்டர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன.
இரவு நெருங்க நெருங்க மழை அதிகரித்தது. விளைவு, தேடுதல் பணியில் லேசான சுணக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பிரதமர் அலுவலகம், சோனியா காந்தி அலுவலகம், காங்கிரஸ் தலைமையகம் என்று எல்லா முனைகளில் இருந்தும் நெருக்குதல்கள் வரத்தொடங்கின. இதனையடுத்து ஏழாயிரம் ராணுவ வீரர்கள் சக்தி வாய்ந்த விளக்குகளின் துணையுடன் கால்நடையாகவே தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிராம மக்களும் மலைவாழ் மக்களும் முன்னாள் நக்சலைட் போராளிளும் வழிகாட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் நல்லமல்லா காட்டுப் பகுதியை செயற்கைக்கோள் கொண்டு புகைப்படம் எடுக்கும் பணிகள் தொடங்கின. நாற்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டபோதும் எதுவுமே பலனளிக்கவில்லை. மோசமான தட்பவெப்பம் காரணமாக படங்களில் தெளிவில்லை. காணாமல் போய் கிட்டத்தட்ட 24 மணி நேரம் வரை ஹெலிகாப்டர் குறித்தோ முதல்வர் உள்ளிட்டோர் குறித்தோ எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
செப்டெம்பர் 3, 2009. வியாழக்கிழமை. காலை ஒன்பது மணி அளவில் மலை உச்சியில் ஹெலிகாப்டர் ஒன்று தென்பட்டிருப்பதாக விமானப்படை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் அது சேதம் அடைந்துள்ளதா அல்லது நல்ல நிலையில் இருக்கிறதா
என்பது குறித்துத் தெரிவிக்கவில்லை. அதேபோல முதல்வர் ரெட்டி உள்ளிட்டோரின் நிலை குறித்தும் எந்தவிதமான தகவலும் இல்லை.
சுமார் பத்தரை மணி அளவில்தான் அந்த அபாயச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் கூடிய காங்கிரஸ் உயர்மட்டத்தலைவர்கள் குழு நீண்ட விவாதத்துக்குப் பிறகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
‘கர்நூல் மாவட்டத்தில் இருந்து கிழக்கே நாற்பது கடல் மைல் உயரத்தில் உள்ள ருத்ரகொண்டா மலைப்பகுதியில் முதல்வர் ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரின் சடலங்கள் ராணுவ கமாண்டோக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் பல துண்டுகளாக சிதறிக் கிடந்தன. உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. '
மாநில முதல்வர் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகி மரணமடைந்தது இந்திய வரலாற்றில் முதன்முறை. அதிர்ச்சியூட்டும் இந்தச் செய்தி கூடவே பல சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. பொதுவாக வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரில்தான் முதல்வர் ரெட்டி பயணம் செய்வது வழக்கம். ஆனால் கர்னூலுக்குப் புறப்படும் சமயத்தில் அது தயாராக இல்லை. மாற்று ஏற்பாடாக பெல் 340 ரக ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளார்.
உண்மையில் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக அது முதல்வரின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமலேயே இருந்தது. தவிரவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பறப்பதற்கான உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. ஆகவே, அந்த ஹெலிகாப்டரை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் 2010 டிசம்பர் வரை பறப்பதற்கு சான்றிதழ் பெற்றுள்ள ஹெலிகாப்டர்தான் அது என்று விமானத்துறை அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதல்வர் ரெட்டி சென்ற ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் இணை பைலட் தவிர ஏழுபேர் பயணம் செய்ய முடியும். ஆனால் இந்தமுறை ஐந்து பேர் மட்டும் சென்றுள்ளனர். முக்கியமான அரசியல் நிகழ்வுக்காக மாநில முதல்வர் செல்லும்போது அவருடைய சக அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏவோ அல்லது எம்.பியோ உடன் செல்வது வழக்கம். ஆனாலும் வெறும் அரசு அதிகாரிகளோடு முதல்வர் அனுப்பப்பட்டது ஏன்? என்ற கேள்வி முக்கியமானது.
ஹெலிகாப்டர் பல துண்டுகளாக சிதறுவதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ‘அதற்கான காரணத்தை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் தகவல்கள் கிடைக்கும்' என்று கூறியிருக்கிறார். இந்த இடத்தில்தான் நக்சலைட்டுகள் தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளது.
ஆட்சிக்கு வந்த புதிதில் நக்சலைட்டுகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பிறகு நக்சலைட்டுகளைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். இதனால் ரெட்டி மீது நக்சலைட்டுகளின் ஆத்திரம் அடைந்து இருந்தனர் என்றும் சில ஆந்திர ஊடகங்கள் அடிக்கடி செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன. மேலும், தங்களுடைய ஹிட் லிஸ்டில் ரெட்டியின் பெயரையும் இடம்பெறச் செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தன.
அந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்து, ‘வானத்தில் சென்ற ஹெலிகாப்டரை நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் தேவையற்ற சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்க அரசு அந்தச் செய்தியை மறைத்திருக்கக்கூடும்' என்றும் சில சந்தேகங்கள் ஆந்திராவில் உலா வருகின்றன. ஆனால் ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்தும் அளவுக்கு சக்தி கொண்ட ஆயுதங்கள் எதுவும் நக்சலைட்டுகள் வசம் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.
உடலை மீட்டெடுக்கவே இருபத்துமூன்று மணி நேரங்கள் தேவைப்பட்டுள்ளன. அதன் பின்னால் புதைந்திருக்கும் உண்மைகளை மீட்டெடுக்க இன்னும் கொஞ்சம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை, இப்போதைக்கு!
(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் நான் எழுதிய கட்டுரை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment