ஆர். முத்துக்குமார்
இரண்டு லட்சம் ருபாய் பரிசு தருகிறோம் என்கிறது சிரோன்மணி அகாலிதளம். வேலையும் கொடுத்து கைநிறையச் சம்பளமும் தருகிறோம்.. வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது குருத்வாரா பிரபந்தக் கமிட்டி. எம்.பி தேர்தலில் நில்லுங்கள்... எந்தத் தொகுதியை ஒதுக்கலாம்? என்று கேட்கிறது ஒரு அரசியல் கட்சி. ஜர்னைல் சிங் என்கிற பத்திரிகையாளருக்குத்தான் இத்தனை வெகுமதிகளும். இத்தனை வரவேற்புகளும். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது ஷூவை விட்டெறிந்த புண்ணியவான் என்று சீக்கியர்கள் ஜர்னைல் சிங்கைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
ப. சிதம்பரத்துக்கும் ஜர்னைல் சிங்குக்கும் நடந்த வார்த்தை மோதலின் உச்சக்கட்டம் என்று ஷூ வீச்சை அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. தான் செய்த முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் செய்தது சரிதான் என்று ஜர்னைல் சிங் பேட்டி அளித்திருக்கிறார். ஆக, இந்த சம்பவத்தின் பின்னணியில் வலுவான வரலாற்று சோகங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட சம்பவங்கள் அவை.
பின்னணி வெகு நீண்டது என்பதால் காலிஸ்தானில் இருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும். இந்தியாவில் சீக்கியர்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார் ஒரு சீக்கியப் போராளி. காலிஸ்தான் என்றால் தூய்மையான மண் என்று அர்த்தம். அந்தப் போராளியின் பெயர், ஜர்னைல் சிங் பிந்த்ரன் வாலே. (ஷூ வீசிய பத்திரிகையாளரின் பெயரும் ஜர்னைல் சிங்!)
சீக்கிய இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வந்த பிந்த்ரன் வாலே, ஒருகட்டத்தில் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தன்னுடைய இயக்கத்தினருடன் சென்று பதுங்கிக்கொண்டார்.
கோயிலுக்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ளவும் அவர் தயங்கவில்லை.
தவறு செய்கிறீர்கள் பிந்த்ரன் வாலே. உடனடியாக பொற்கோவிலில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தது மத்திய அரசு. ம்ஹும். பிந்த்ரன் வாலே அசைந்துகொடுக்கவில்லை. அசைத்துப் பார்க்க முடிவெடுத்த இந்திரா, ராணுவத்தை பொற்கோவிலுக்குள் நுழைய உத்தரவிட்டார். ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். பொற்கோவில் விடுவிக்கப்பட்டது.
சீக்கியர்கள் இந்திராவைக் கொண்டாடுவார்கள் என்று நினைத்தார் இந்திரா. ஆனால் அனல் பார்வை வீசினர் சீக்கியர்கள். தங்கள் புனிதத் தலத்துக்குள் ராணுவத்தை ஆயுதங்களுடன் நுழையவைத்த இந்திராவுக்கு எதிராக கடும் கண்டனங்களை சீக்கிய அமைப்புகள் பதிவு செய்தன. இந்திரா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் தலைகள் சீக்கியர்களால் துண்டிக்கப்படும் என்று ஆவேசப்பட்டனர். எங்கு பார்த்தாலும் கண்டனக்கூட்டங்கள். பிறகு மெல்ல மெல்ல போராட்டத்தின் வீரியம் தணிந்தது.
அப்போதைக்கு அடங்கியது போல இருந்த அந்த வெறி அக்டோபர் 31, 1984 அன்று கொடூரமான முறையில் வெளிப்பட்டது. தன்னுடைய பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா. சுட்டவர்கள் சீக்கியர்கள் என்ற விஷயம் வெளியே கசிந்த மறுநொடியே ஆரம்பமாகி விட்டது கலவரம். காங்கிரஸ்காரர்களின் ரத்தம் அதிகபட்ச கொதிநிலைக்கு வந்திருந்தது. ஒருவர் பின் ஒருவராக வீதிக்கு வரத் தொடங்கினர்.
ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது. அடியுங்கள். உதையுங்கள். உயிரோடு கொளுத்துங்கள். கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர் உள்ளூர்த் தலைவர்கள்.கொப்பளிக்கும் ஆத்திரத்துடன் காங்கிரஸ்காரர்கள் சீக்கியர்களைத் தேடித்தேடி தாக்குதல் நடத்தினர். உடனடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் டெல்லியின் புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் சீக்கியர்களே. சுல்தான்புரி, மங்கோல்புரி, த்ரிலோக்புரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.
இரும்புத் தடி. பளபளக்கும் கத்தி. மண்ணெண்ணெய் பாட்டில் சகிதமாகக் கலவரக்காரர்கள் களத்தில் இறங்கியிருந்தனர். ஆனால், சீக்கியர்களைத் தேடிப்பிடிப்பதில் சிரமம் இருந்தது. என்ன செய்யலாம்?
வாக்காளர் பட்டியலை கையில் எடுத்துக்கொள்வோம். வீட்டுவாசலுக்கே சென்று தாக்குவதற்கு வசதியாக இருக்கும் என்றார் ஒரு புண்ணியாத்மா. ஆலோசனை கொடுத்த நபருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, உற்சாகமாகப் புறப்பட்டனர். தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதறி ஓடினர் சீக்கியர்கள். ஓர் இடம் முடிந்தால் அடுத்த இடம். அது முடிந்தால் அடுத்தது. சளைக்காமல் ரகளை செய்தனர் காங்கிரஸ் தொண்டர்கள். சீக்கியர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத அபாயகரமான சூழல் அது.
சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்குப் பலியாகியிருந்தனர். வெறியாட்டத்துக்கு இடையே பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்திருந்தார் ராஜிவ் காந்தி. சீக்கியர்கள் படுகொலை குறித்து செய்தியாளர்கள் ராஜிவ் காந்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதிலை சீக்கியர்களால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை.
‘பழுத்த மரம் சாயும்போது, நிலம் அதிரத்தான் செய்யும்.’
சீக்கியர்களுக்கு எதிராக நடந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்ற முக்கியஸ்தர்களே காரணம் என்று சீக்கியர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கால் நூற்றாண்டுகளாக நிலுவையிலும் இழுவையிலும் இருந்த இந்த வழக்கில் ஜெகதீஷ் டைட்லரும் சஜ்ஜன் குமாரும் குற்றமற்றவர்கள் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தது சி,பி.ஐ.
அவ்வளவுதான். கொதித்து எழுந்துவிட்டனர் சீக்கியர்கள். சாலை மறியல், ரயில் மறியல் என்று மீண்டும் போராட்டக்களத்துக்கு வந்துவிட்டனர். காங்கிரஸ் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த விடுவிப்பு நிகழ்ந்துள்ளது என்பது சீக்கிய அமைப்புகளின் குற்றச்சாட்டு. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டைட்லர் விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இது பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கை ஆத்திரப்படுத்திவிட்டது. தைனிக் ஜார்கன் என்ற பத்திரிகையின் சிறப்பு செய்தியாளராக இவர். காங்கிரஸ் அலுவலகச் செய்திகளை சேகரிப்பது இவரது பணியாக இருப்பதால் பல காங்கிரஸ் தலைவர்களை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தி ப. சிதம்பரத்திடம் நேரடியாகவே விளக்கம்கேட்க முடிவு செய்தார். கேட்டார். பதில் திருப்தி தரவில்லை. ஷூவை வீசியெறிந்து தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டார்.
ஏற்கெனவே ஜார்ஜ் புஷ் மீது நடந்த பாக்தாத் ஷூ தாக்குதல் நன்றாக நினைவில் இருந்ததால் இந்த விவகாரத்தை மிகவும் நாசூக்காகக் கையாண்டார் ப. சிதம்பரம். ஜர்னைல் சிங்கைப் பக்குவமாகக் கையாளுங்கள் என்று பாதுகாவலர்களிடம் சொன்னார். மன்னித்துவிட்டேன் என்றார். ஜர்னைல் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிட்டார்கள் சீக்கியர்கள்.
ஜெகதீஷ் டைட்லரை நிரபராதி என்று அறிவிக்க சி.பி.ஐக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி தரப்படும் என்று எச்சரித்துள்ளன சீக்கியக் கட்சிகள்.
டெயில் பீஸ்:
சீக்கியர்களின் எழுச்சியால் அதிர்ந்து போயிருக்கும் காங்கிரஸ் தலைமை, டெல்லி தேர்தலில் போட்டியிடும் ஜெகதீஷ் டைட்லரையும் சஜ்ஜன் குமாரையும் வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இது சிதம்பரம் என்ற தனிமனிதனுக்கு ஏற்ப்பட்ட அவமானமல்ல சிவகங்கை தொகுதியில் உள்ள ஒவ்வொரு தமிழக வாக்காளர்களுக்கும் ஏற்ப்பட்ட தாகவே எண்ணுகிறேன் செயலை கண்டிக்க தமிழகத்தில் யாரும் தயாரில்லை . அதுதான் தமிழன்
Post a Comment