Tuesday, April 21, 2009

பிரதமர் பிரகாஷ் காரத்?!

ஆர். முத்துக்குமார்

சரித்திரத் தவறு என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இடதுசாரிகள். 1996ல் பிரதமர் பதவியை ஏற்காமல் விட்டது அவர்களுக்குள் இன்னமும் நீருபூத்த நெருப்பாகவே இருக்கிறது. 1996 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் விநோதமாக இருந்தன. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கும் கிடைக்கவில்லை. எஞ்சியிருந்தவை இடது சாரிகள், ஜனதா தளம் மற்றும் சில பிராந்தியக் கட்சிகள். காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்கும் பணியில் இடதுசாரிகளும் ஜனதா தளத்தினரும் இறங்கினார்கள்.

ஜனதா தளம். சி.பி.எம், சி.பி.ஐ, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தி.மு.க, த.மா.கா, ஃபார்வர்டு ப்ளாக், அசாம் கன பரிஷத் எல்லோருமாகச் சேர்ந்து ஐக்கிய மொத்தம் 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி உருவாக்கினர். மொத்தம் 187 எம்.பிக்கள் தேறியிருந்தனர்.

யாரைப் பிரதமராக்குவது? இடதுசாரிகள் தவிர்த்த அத்தனைபேரும் ஜோதிபாசுவை நோக்கியே கைநீட்டினார்கள். அவரும் தலையசைத்துவிட்டார். சி.பி.எம்மில் இருந்தவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. உடனடியாக மத்தியக்குழுவில் விவாதிக்கவேண்டும் என்றனர். ஆளுக்கொரு கருத்து. சிலர் எதிர்த்தனர். சிலர் மறுத்தனர். சிலர் வரவேற்றுப் பேசினர். ஒத்தக்கருத்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

மத்திய அரசில் பங்கே தேவையில்லை. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலே போதுமானது என்று சொல்லிவிட்டது மத்தியக்குழு. உண்மையில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு ஜோதிபாசுவைப் பிரதமராக்குவதில் விருப்பம் இருந்தது. ஆனாலும் மத்தியக்குழு நிராகரித்துவிட்டதால் ஐக்கிய முன்னணிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

‘வாய்ப்பே இல்லை. நீங்கள்தான் பிரதமர். உங்கள் தலைமையில்தான் ஆட்சி’

திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள். தர்ம சங்கடத்தில் நெளிந்த சி.பி.எம் வேறு வழியில்லாமல் மீண்டும் மத்தியக்குழுவைக் கூட்டியது. வாதம். பிரதிவாதம். நீண்ட நெடிய இழுவைப்பிறகு அதே பல்லவி. புதிய ராகத்தில்.

‘காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசு அமைக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. அந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதே போதுமானது என்று கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது’

வேறு வழியில்லாமல் பிரதமர் வேட்டை நடத்தியது ஐக்கிய முன்னணி. மூப்பனார் பெயரைக்கூடப் பரிசீலித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டம் தேவே கௌடாவுக்கு அடித்தது. பிரதமரானார்.

கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.எம்க்குப் பிரதமர் ஆசை வந்திருக்கிறது. ஒருவேளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவி சி.பி.எம்முக்குக் கிடைக்கும் பட்சத்தில் அதை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருக்கிறார் சி.பி.எம்மின் சீதாராம் யெச்சூரி. அத்வானி, மன்மோகன் சிங், மாயாவதி, சரத்பவார், ஜெயலலிதா, பிரகாஷ் காரத்.. அடுத்தது யாருப்பா?

எல்லாம் சரி, ஒருவேளை தோழர் ஒருவர் பிரதமர் ஆகிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘நீங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருந்து விலகுகிறீர்கள் என்று இடதுசாரி அரசுக்கு ஆதரவு தருபவர்கள் கேட்கலாமா? ஆதரவு மறுபரிசீலனை போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்களா? ஏனென்றால் சில வார்த்தைகள் அவர்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்டவை என்பது போல நடந்து கொள்வார்கள். சரி, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்!

Saturday, April 18, 2009

நாங்களும் 'யூத்'துதான்

என். சொக்கன்

ட்வென்டி ட்வென்டி, ஐபிஎல் எல்லாம் இளைஞர்களுக்கான ஆட்டம். இதில் பெரிசுகள் எதற்கு? ஒதுங்கிக்கொண்டு இளசுகளுக்கு வழிவிடலாமில்லையா?

போன ஐபிஎல்லிலேயே இந்தக் கூக்குரல் தொடங்கிவிட்டது. குறிப்பாக சச்சின், திராவிட், கங்குலி, கும்ப்ளே, லஷ்மண் ஆகியோர் கடும் விமரிசனங்களுக்கு ஆளானார்கள்.

சச்சினாவது பரவாயில்லை. உடல்நிலை சரியில்லாததால் பாதி ஐபிஎல்லில் மட்டும் விளையாடிவிட்டுத் தப்பிவிட்டார். மற்ற சீனியர்கள் மிகச் சுமாராக ஆடிச் சொதப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இந்தக் குரல் மிக வலுவாகவே கேட்டது.

இதோ அடுத்த ஐபிஎல் வந்துவிட்டது. எல்லா சீனியர்களுக்கும் இன்னொரு வயது கூடுதலாகிவிட்டது. இப்போதாவது இவர்கள் ரிடையராகித் தொலைக்கக்கூடாதா? இளைய பாரதம் கேட்கிறது.

சீனியர்களின் நல்ல நேரம், ஐபிஎல் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு என்ன நல்ல நேரம்?

ட்வென்டி ட்வென்டி, ஐபிஎல்லின் இளம் சிங்கங்கள் பலர், தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் விளையாடியது இல்லை. நம் ஊர் மைதானங்களுடன் ஒப்பிடுகையில் அங்கே பந்து கொஞ்சம் அதிகமாக எழும்பி வரும், அதைக் கணித்து ஆடாமல் கண்ணை மூடிக்கொண்டு விளாசினால் காலி.

இங்கேதான் சீனியர்களுக்கு நல்ல வாய்ப்பு. முதல் நாளிலேயே அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த ‘யூத்’ ஆட்டங்களிலும் எங்களுக்கு இடம் உண்டு என்று நிரூபித்துவிட்டார்கள்.

முதல் ஆட்டத்தில் சச்சின் அரை சதம் அடித்து, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டத்தில் திராவிட் அரை சதம் அடித்துத் தன் அணியின் ஸ்கோரை ஓரளவு நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார்.

அதன்பிறகு வந்தவர், இவர்களையெல்லாம்விடச் சில ஆண்டுகள் வயதில் மூத்த, நிஜமான ‘சீனியர்’ கும்ப்ளே. ஐந்து ரன்னுக்கு ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்திவிட்டார்.

இந்த சீனியர் கொண்டாட்டத்தில் அடிபட்டது, சென்னை, ராஜஸ்தான் அணிகள். வேடிக்கையான விஷயம், இந்த இரு அணிகளும் சென்ற வருடம் இறுதிப் போட்டியில் இடம் பெற்றவை.

வின்னர், ரன்னர் இருவரையும் மண்ணைக் கவ்வ வைத்திருக்கும் சீனியர் படைகள் தொடர்ந்து ஜெயிக்குமா? அல்லது ஜூனியர்கள் தென் ஆப்பிரிக்க மைதானங்களுக்குப் பழகிக்கொண்டு, அதற்கேற்பத் தங்கள் ஆட்ட பாணியை மாற்றிக் கலக்குவார்களா? ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.

வெல்கம் ஐபிஎல்2!

ஐ.பி.எல் முதல் போட்டி - முழுவிவரம்

ஆர். முத்துக்குமார்

தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கிவிட்டது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட். எல்லா அணிகளும் பல புதிய வீரர்களை வாங்கியுள்ளன. கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் போன்ற அசகாய சூரர்கள் இப்போது ஐ.பி.எல் முகாமுக்குள் நுழைந்துள்ளார்கள்.

முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே. சென்னை அணிக்குத் தலைவர் மகேந்திர சிங் தோனி. மும்பைக்கு சச்சின் டெண்டுல்கர்.

டாஸில் வென்றவர் சென்னையின் தோனி. தன்னுடைய அணி முதலில் பந்துவீசும் என்றார். நன்றாகவே வீசியது. மும்பை வீரர்கள் ஒன்றும் வானவேடிக்கை எல்லாம் நிகழ்த்த முடியவில்லை. அடக்கித்தான் வாசிக்க முடிந்தது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். நாலு ஓவருக்கு நாற்பத்தி நான்கு. கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜோகிந்தர் சர்மா நான்கு ஓவர்களையும் நன்றாகவே வீசினார். மொத்தம் இருபத்தைந்து ரன்களை விட்டுக்கொடுத்தார்.

மும்பை அணித்தலைவர் சச்சின் தொடக்கத்தில் இருந்தே நிதானம் காட்டினார். 49 பந்துகளில் 59 ரன்கள். நிதானமாக ஆடிவந்த அணிக்கு உடுக்கை அடித்து உசுப்பேற்றியவர் நாயர். ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையை ஏற்படுத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை இந்தியன்ஸ் இருபது ஓவர்களில் 165 ரன்கள்.

ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற முடிவில் களத்துக்கு வந்தனர் சென்னை அணியினர். வந்த வேகத்தில் இரண்டு விக்கெட்டுகள். ஃப்ளிண்டாஃப் மாயாஜாலம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்த்தனர். ம்ஹூம். கால் சதத்துக்கு முன்பே பெவிலியனுக்குப் போய்விட்டார்.

ஹெய்டன் சாதிப்பார் என்று நினைத்தால் அவரும் 44 ரன்களுடன் கிளம்பிவிட்டார். முடிந்தவரை முயல்வது என்ற எண்ணத்தில் கேப்டன் தோனி ஆடினார். 36 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அவருடைய விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது. இருபது ஓவர்கள் முடியும்போது சென்னை அணியின் ஸ்கோர் 146.

சென்னை அணியை தோல்வியடையச் செய்ததில் மும்பை அணியில் மலிங்காவுக்கு முக்கியப்பங்கு உண்டு. நான்கு ஓவர்கள் பந்துவீசி பதினைந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், நிதானமாக ஆடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொடுத்த சச்சின் டெண்டுல்கருக்குத்தான் ஆட்டநாயகன் விருது.

Wednesday, April 15, 2009

எந்த மாநிலத்தில் யார் யார்? - பகுதி 2

ஆந்திரா

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் இரண்டுக்கும் சேர்த்து தேர்தல் நடக்கிறதது. மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 42 நாடாளுமன்றத் தொகுதிகளும் நடைபெற இருக்கும் தேர்தலில் மொத்தம் நான்கு அணிகள் களம் காண்கின்றன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. தெலுங்கு தேச அணியில் தெலுங்கு தேசம், இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. புதிய சக்தியாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யமும் இந்தத் தேர்தல் களத்தில் இருக்கிறது. கடந்த காலத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் நெருக்கம் காட்டிய பாஜக இந்தமுறை தனித்தவில் வாசிக்கிறது.

மேற்கு வங்கம்

இடதுசாரிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, ஃபார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன். காங்கிரஸ் கட்சி உள்ளூர் ஜாம்பவனான மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

Tuesday, April 14, 2009

26/11: மும்பை தாக்குதல்!

மும்பை தாக்குதல் பற்றி இன்னமும் ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ஒரு கோணத்தில் இருந்து பார்க்கப்பட்ட மும்பை தாக்குதல் இப்போது வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்து தான் தெளிவடைந்து இந்தியாவைக் குழப்பிக்கொண்டிருக்கிறது.


நவம்பர் 2ல் நடந்த மும்பை தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது எங்கே? எப்படி? எதற்காக? யார் இந்த லஷ்கர் ஏ தொய்பா? அல்லது ஜமா - உத் - தவா? ஐஎஸ்ஐக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா? ஒன்பது தீவிரவாதிகளைச் சமாளிக்க முடியாமல் தேசிய பாதுகாப்புப் படையினர் திணறியதற்கு என்ன காரணம்? எதிர் நடவடிக்கையின்போது எங்கெல்லாம் தவறு நிகழ்ந்தது? தாக்குதலுக்குப் பிறகு என்னென்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன? உள்ளிட்ட முக்கியமான சங்கதிகளைக் கொண்டு மினிமேக்ஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Friday, April 10, 2009

எந்த மாநிலத்தில் யார் யார்? - பகுதி 1

உத்தர பிரதேசம்

எண்பது நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். பிரதான கட்சிகள் என்று பார்த்தால் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி. வழக்கம்போல காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா. எல்லா கட்சிகளுமே தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த மாநிலத்தில் அதிகம் வெற்றிகளைக் குவிக்கும் கட்சி அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கும். அது, முலாயம் சிங்கா மாயாவதியா என்பதுதான் குழப்பம்.

பிகார்

லாலு பிரசாத், நிதீஷ் குமார் இவர்கள்தான் பிகாரின் தலைமைப் பீடாதிபதிகள். நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ராம் விலாஸ் பாஸ்வானும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். லாலுவுக்கு 34. பாஸ்வானுக்கு ஆறு. எதிர் அணியில் நிதீஷ் குமாரும் பாரதிய ஜனதாவும் கைகோத்திருக்கின்றன. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா 15 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. காங்கிரஸ் தனித்து நிற்கிறது.

ப.சிதம்பரம் மீதான 'பாக்தாத்' தாக்குதல்!

ஆர். முத்துக்குமார்

இரண்டு லட்சம் ருபாய் பரிசு தருகிறோம் என்கிறது சிரோன்மணி அகாலிதளம். வேலையும் கொடுத்து கைநிறையச் சம்பளமும் தருகிறோம்.. வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது குருத்வாரா பிரபந்தக் கமிட்டி. எம்.பி தேர்தலில் நில்லுங்கள்... எந்தத் தொகுதியை ஒதுக்கலாம்? என்று கேட்கிறது ஒரு அரசியல் கட்சி. ஜர்னைல் சிங் என்கிற பத்திரிகையாளருக்குத்தான் இத்தனை வெகுமதிகளும். இத்தனை வரவேற்புகளும். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது ஷூவை விட்டெறிந்த புண்ணியவான் என்று சீக்கியர்கள் ஜர்னைல் சிங்கைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ப. சிதம்பரத்துக்கும் ஜர்னைல் சிங்குக்கும் நடந்த வார்த்தை மோதலின் உச்சக்கட்டம் என்று ஷூ வீச்சை அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. தான் செய்த முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் செய்தது சரிதான் என்று ஜர்னைல் சிங் பேட்டி அளித்திருக்கிறார். ஆக, இந்த சம்பவத்தின் பின்னணியில் வலுவான வரலாற்று சோகங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட சம்பவங்கள் அவை.

பின்னணி வெகு நீண்டது என்பதால் காலிஸ்தானில் இருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும். இந்தியாவில் சீக்கியர்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார் ஒரு சீக்கியப் போராளி. காலிஸ்தான் என்றால் தூய்மையான மண் என்று அர்த்தம். அந்தப் போராளியின் பெயர், ஜர்னைல் சிங் பிந்த்ரன் வாலே. (ஷூ வீசிய பத்திரிகையாளரின் பெயரும் ஜர்னைல் சிங்!)

சீக்கிய இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வந்த பிந்த்ரன் வாலே, ஒருகட்டத்தில் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தன்னுடைய இயக்கத்தினருடன் சென்று பதுங்கிக்கொண்டார்.
கோயிலுக்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ளவும் அவர் தயங்கவில்லை.

தவறு செய்கிறீர்கள் பிந்த்ரன் வாலே. உடனடியாக பொற்கோவிலில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தது மத்திய அரசு. ம்ஹும். பிந்த்ரன் வாலே அசைந்துகொடுக்கவில்லை. அசைத்துப் பார்க்க முடிவெடுத்த இந்திரா, ராணுவத்தை பொற்கோவிலுக்குள் நுழைய உத்தரவிட்டார். ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். பொற்கோவில் விடுவிக்கப்பட்டது.

சீக்கியர்கள் இந்திராவைக் கொண்டாடுவார்கள் என்று நினைத்தார் இந்திரா. ஆனால் அனல் பார்வை வீசினர் சீக்கியர்கள். தங்கள் புனிதத் தலத்துக்குள் ராணுவத்தை ஆயுதங்களுடன் நுழையவைத்த இந்திராவுக்கு எதிராக கடும் கண்டனங்களை சீக்கிய அமைப்புகள் பதிவு செய்தன. இந்திரா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் தலைகள் சீக்கியர்களால் துண்டிக்கப்படும் என்று ஆவேசப்பட்டனர். எங்கு பார்த்தாலும் கண்டனக்கூட்டங்கள். பிறகு மெல்ல மெல்ல போராட்டத்தின் வீரியம் தணிந்தது.

அப்போதைக்கு அடங்கியது போல இருந்த அந்த வெறி அக்டோபர் 31, 1984 அன்று கொடூரமான முறையில் வெளிப்பட்டது. தன்னுடைய பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா. சுட்டவர்கள் சீக்கியர்கள் என்ற விஷயம் வெளியே கசிந்த மறுநொடியே ஆரம்பமாகி விட்டது கலவரம். காங்கிரஸ்காரர்களின் ரத்தம் அதிகபட்ச கொதிநிலைக்கு வந்திருந்தது. ஒருவர் பின் ஒருவராக வீதிக்கு வரத் தொடங்கினர்.

ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது. அடியுங்கள். உதையுங்கள். உயிரோடு கொளுத்துங்கள். கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர் உள்ளூர்த் தலைவர்கள்.கொப்பளிக்கும் ஆத்திரத்துடன் காங்கிரஸ்காரர்கள் சீக்கியர்களைத் தேடித்தேடி தாக்குதல் நடத்தினர். உடனடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் டெல்லியின் புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் சீக்கியர்களே. சுல்தான்புரி, மங்கோல்புரி, த்ரிலோக்புரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.

இரும்புத் தடி. பளபளக்கும் கத்தி. மண்ணெண்ணெய் பாட்டில் சகிதமாகக் கலவரக்காரர்கள் களத்தில் இறங்கியிருந்தனர். ஆனால், சீக்கியர்களைத் தேடிப்பிடிப்பதில் சிரமம் இருந்தது. என்ன செய்யலாம்?

வாக்காளர் பட்டியலை கையில் எடுத்துக்கொள்வோம். வீட்டுவாசலுக்கே சென்று தாக்குவதற்கு வசதியாக இருக்கும் என்றார் ஒரு புண்ணியாத்மா. ஆலோசனை கொடுத்த நபருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, உற்சாகமாகப் புறப்பட்டனர். தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதறி ஓடினர் சீக்கியர்கள். ஓர் இடம் முடிந்தால் அடுத்த இடம். அது முடிந்தால் அடுத்தது. சளைக்காமல் ரகளை செய்தனர் காங்கிரஸ் தொண்டர்கள். சீக்கியர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத அபாயகரமான சூழல் அது.

சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்குப் பலியாகியிருந்தனர். வெறியாட்டத்துக்கு இடையே பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்திருந்தார் ராஜிவ் காந்தி. சீக்கியர்கள் படுகொலை குறித்து செய்தியாளர்கள் ராஜிவ் காந்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதிலை சீக்கியர்களால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை.

‘பழுத்த மரம் சாயும்போது, நிலம் அதிரத்தான் செய்யும்.’

சீக்கியர்களுக்கு எதிராக நடந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்ற முக்கியஸ்தர்களே காரணம் என்று சீக்கியர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கால் நூற்றாண்டுகளாக நிலுவையிலும் இழுவையிலும் இருந்த இந்த வழக்கில் ஜெகதீஷ் டைட்லரும் சஜ்ஜன் குமாரும் குற்றமற்றவர்கள் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தது சி,பி.ஐ.

அவ்வளவுதான். கொதித்து எழுந்துவிட்டனர் சீக்கியர்கள். சாலை மறியல், ரயில் மறியல் என்று மீண்டும் போராட்டக்களத்துக்கு வந்துவிட்டனர். காங்கிரஸ் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த விடுவிப்பு நிகழ்ந்துள்ளது என்பது சீக்கிய அமைப்புகளின் குற்றச்சாட்டு. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டைட்லர் விடுவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இது பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கை ஆத்திரப்படுத்திவிட்டது. தைனிக் ஜார்கன் என்ற பத்திரிகையின் சிறப்பு செய்தியாளராக இவர். காங்கிரஸ் அலுவலகச் செய்திகளை சேகரிப்பது இவரது பணியாக இருப்பதால் பல காங்கிரஸ் தலைவர்களை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தி ப. சிதம்பரத்திடம் நேரடியாகவே விளக்கம்கேட்க முடிவு செய்தார். கேட்டார். பதில் திருப்தி தரவில்லை. ஷூவை வீசியெறிந்து தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டார்.

ஏற்கெனவே ஜார்ஜ் புஷ் மீது நடந்த பாக்தாத் ஷூ தாக்குதல் நன்றாக நினைவில் இருந்ததால் இந்த விவகாரத்தை மிகவும் நாசூக்காகக் கையாண்டார் ப. சிதம்பரம். ஜர்னைல் சிங்கைப் பக்குவமாகக் கையாளுங்கள் என்று பாதுகாவலர்களிடம் சொன்னார். மன்னித்துவிட்டேன் என்றார். ஜர்னைல் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிட்டார்கள் சீக்கியர்கள்.

ஜெகதீஷ் டைட்லரை நிரபராதி என்று அறிவிக்க சி.பி.ஐக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி தரப்படும் என்று எச்சரித்துள்ளன சீக்கியக் கட்சிகள்.

டெயில் பீஸ்:

சீக்கியர்களின் எழுச்சியால் அதிர்ந்து போயிருக்கும் காங்கிரஸ் தலைமை, டெல்லி தேர்தலில் போட்டியிடும் ஜெகதீஷ் டைட்லரையும் சஜ்ஜன் குமாரையும் வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

Monday, April 6, 2009

ஜெயலலிதாவின் பலம்... பலவீனம்!

அ.தி.மு.க என்ற இயக்கம் எம்.ஜி.ஆரின் தலைமையின் கீழ் செயல்பட்டதைக் காட்டிலும் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்பட்ட காலங்களே அதிகம். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க என்ற கட்சியை இன்னமும் உயிரோட்டத்துடன் இயங்க வைத்திருப்பதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது.

எம்.ஜி.ஆர் ஏன் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார்? ஜெயலலிதாவை ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் புறக்கணித்தார் என்பது உண்மையா? ஜெயலலிதா ஆர்.எம்.வீ மோதலுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி? முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டெடுத்தது எப்படி? தன்னம்பிக்கை என்பது ஜெயலலிதாவின் பலமா? பலவீனமா?


இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மினிமேக்ஸ் வெளியீடாக வந்திருக்கும் 'ஜெயலலிதா'. நூலை எழுதியிருப்பவர் ஜெ. ராம்கி.தமிழின் முக்கியமான வலைப்பதிவர்களுள் ஒருவர். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை முன்னதாக எழுதியிருக்கிறார்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

Sunday, April 5, 2009

திமுக வேட்பாளர்கள் தயார்!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகின்றன. இதில் முதலிடம் தே.மு.தி.கவுக்குதான். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. தற்போது தி.மு.க 21 வேட்பாளர்களைக் கொண்ட தன்னுடைய பட்டியலை வெளியிட்டுள்ளது.

1.மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
3.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
4.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
5.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
6.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
7.கிருஷ்ணகிரி - சுகவனம்.
8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.
9. கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
10.திருவண்ணாமலை - வேணுகோபால்.
11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.
14.பெரம்பலூர் - நெப்போலியன்.
15.நீலகிரி (தனி) - ராசா.
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
17.மதுரை - மு.க.அழகிரி.
18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
19.தூத்துக்குடி - ஜெயதுரை.
20.நாமக்கல் - காந்தி செல்வன்.
21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.

Friday, April 3, 2009

மூவர் அமைத்த நான்காவது அணி!

ஆர். முத்துக்குமார்

தேசிய அரசியலில் மூன்றாவது அணி என்பது கேலிக்குரிய சங்கதி. பெரிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட அல்லது பிரதமர் கனவில் அரசியலை நகர்த்துகின்ற தலைவர்களால் உருவாக்கப்படும் அணி என்று சொல்லப்படுவதுண்டு.

தற்போது தேசிய அளவில் மூன்றாவது அணி தேர்தல் களத்தில் இருக்கிறது. அதன் முக்கியமான உறுப்பினர்கள் இடதுசாரிகள். தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

திடீரென நான்காவதாக ஒரு அணி உருவாகியிருக்கிறது. உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் செல்வாக்கு கொண்ட முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவரே இந்த நான்காவது அணியின் காப்பிரைட் ஹோல்டர்கள். 80 + 42 தொகுதிகளில் இந்த நான்காவது அணி ஏதேனும் மேஜிக் செய்துவிட முடியும் என்று நம்புகிறது இந்த மூவர் அணி.

அப்படி ஜெயித்தால்?

இதற்கான பதிலை லாலு சூசகமாகச் சொல்லிவிட்டார்.

'நான்காவது அணி காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானது அல்ல'

Wednesday, April 1, 2009

பா.ஜ.கவுக்கு சில கேள்விகள்!

ஜனசங்கத்தின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்?

பா.ஜ.க.வின் பின்னணி என்ன?

எப்படி வளர்ந்தது இந்தக் கட்சி?

பாபர் மசூதி இடிப்புதான் பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதா?

இந்துத்வாவைத் தொடர்ந்து வலியுறுத்துவது பாரதிய ஜனதாவுக்கு பலமா? பலவீனமா?




மினிமேக்ஸ் வெளியிட்டுள்ள 'கட்சிகளின் கதை : பா.ஜ.க' புத்தகம் இதற்கான பதில்களைக் கொடுக்கிறது. நூலை எழுதியவர் எஸ். சந்திரமெளலி. பத்திரிகையாளர். கல்கி பத்திரிகையில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதிவருபவர்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க