Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Saturday, April 18, 2009

நாங்களும் 'யூத்'துதான்

என். சொக்கன்

ட்வென்டி ட்வென்டி, ஐபிஎல் எல்லாம் இளைஞர்களுக்கான ஆட்டம். இதில் பெரிசுகள் எதற்கு? ஒதுங்கிக்கொண்டு இளசுகளுக்கு வழிவிடலாமில்லையா?

போன ஐபிஎல்லிலேயே இந்தக் கூக்குரல் தொடங்கிவிட்டது. குறிப்பாக சச்சின், திராவிட், கங்குலி, கும்ப்ளே, லஷ்மண் ஆகியோர் கடும் விமரிசனங்களுக்கு ஆளானார்கள்.

சச்சினாவது பரவாயில்லை. உடல்நிலை சரியில்லாததால் பாதி ஐபிஎல்லில் மட்டும் விளையாடிவிட்டுத் தப்பிவிட்டார். மற்ற சீனியர்கள் மிகச் சுமாராக ஆடிச் சொதப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இந்தக் குரல் மிக வலுவாகவே கேட்டது.

இதோ அடுத்த ஐபிஎல் வந்துவிட்டது. எல்லா சீனியர்களுக்கும் இன்னொரு வயது கூடுதலாகிவிட்டது. இப்போதாவது இவர்கள் ரிடையராகித் தொலைக்கக்கூடாதா? இளைய பாரதம் கேட்கிறது.

சீனியர்களின் நல்ல நேரம், ஐபிஎல் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு என்ன நல்ல நேரம்?

ட்வென்டி ட்வென்டி, ஐபிஎல்லின் இளம் சிங்கங்கள் பலர், தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் விளையாடியது இல்லை. நம் ஊர் மைதானங்களுடன் ஒப்பிடுகையில் அங்கே பந்து கொஞ்சம் அதிகமாக எழும்பி வரும், அதைக் கணித்து ஆடாமல் கண்ணை மூடிக்கொண்டு விளாசினால் காலி.

இங்கேதான் சீனியர்களுக்கு நல்ல வாய்ப்பு. முதல் நாளிலேயே அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த ‘யூத்’ ஆட்டங்களிலும் எங்களுக்கு இடம் உண்டு என்று நிரூபித்துவிட்டார்கள்.

முதல் ஆட்டத்தில் சச்சின் அரை சதம் அடித்து, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டத்தில் திராவிட் அரை சதம் அடித்துத் தன் அணியின் ஸ்கோரை ஓரளவு நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார்.

அதன்பிறகு வந்தவர், இவர்களையெல்லாம்விடச் சில ஆண்டுகள் வயதில் மூத்த, நிஜமான ‘சீனியர்’ கும்ப்ளே. ஐந்து ரன்னுக்கு ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்திவிட்டார்.

இந்த சீனியர் கொண்டாட்டத்தில் அடிபட்டது, சென்னை, ராஜஸ்தான் அணிகள். வேடிக்கையான விஷயம், இந்த இரு அணிகளும் சென்ற வருடம் இறுதிப் போட்டியில் இடம் பெற்றவை.

வின்னர், ரன்னர் இருவரையும் மண்ணைக் கவ்வ வைத்திருக்கும் சீனியர் படைகள் தொடர்ந்து ஜெயிக்குமா? அல்லது ஜூனியர்கள் தென் ஆப்பிரிக்க மைதானங்களுக்குப் பழகிக்கொண்டு, அதற்கேற்பத் தங்கள் ஆட்ட பாணியை மாற்றிக் கலக்குவார்களா? ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.

வெல்கம் ஐபிஎல்2!

ஐ.பி.எல் முதல் போட்டி - முழுவிவரம்

ஆர். முத்துக்குமார்

தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கிவிட்டது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட். எல்லா அணிகளும் பல புதிய வீரர்களை வாங்கியுள்ளன. கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் போன்ற அசகாய சூரர்கள் இப்போது ஐ.பி.எல் முகாமுக்குள் நுழைந்துள்ளார்கள்.

முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே. சென்னை அணிக்குத் தலைவர் மகேந்திர சிங் தோனி. மும்பைக்கு சச்சின் டெண்டுல்கர்.

டாஸில் வென்றவர் சென்னையின் தோனி. தன்னுடைய அணி முதலில் பந்துவீசும் என்றார். நன்றாகவே வீசியது. மும்பை வீரர்கள் ஒன்றும் வானவேடிக்கை எல்லாம் நிகழ்த்த முடியவில்லை. அடக்கித்தான் வாசிக்க முடிந்தது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். நாலு ஓவருக்கு நாற்பத்தி நான்கு. கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜோகிந்தர் சர்மா நான்கு ஓவர்களையும் நன்றாகவே வீசினார். மொத்தம் இருபத்தைந்து ரன்களை விட்டுக்கொடுத்தார்.

மும்பை அணித்தலைவர் சச்சின் தொடக்கத்தில் இருந்தே நிதானம் காட்டினார். 49 பந்துகளில் 59 ரன்கள். நிதானமாக ஆடிவந்த அணிக்கு உடுக்கை அடித்து உசுப்பேற்றியவர் நாயர். ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையை ஏற்படுத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை இந்தியன்ஸ் இருபது ஓவர்களில் 165 ரன்கள்.

ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற முடிவில் களத்துக்கு வந்தனர் சென்னை அணியினர். வந்த வேகத்தில் இரண்டு விக்கெட்டுகள். ஃப்ளிண்டாஃப் மாயாஜாலம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்த்தனர். ம்ஹூம். கால் சதத்துக்கு முன்பே பெவிலியனுக்குப் போய்விட்டார்.

ஹெய்டன் சாதிப்பார் என்று நினைத்தால் அவரும் 44 ரன்களுடன் கிளம்பிவிட்டார். முடிந்தவரை முயல்வது என்ற எண்ணத்தில் கேப்டன் தோனி ஆடினார். 36 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அவருடைய விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது. இருபது ஓவர்கள் முடியும்போது சென்னை அணியின் ஸ்கோர் 146.

சென்னை அணியை தோல்வியடையச் செய்ததில் மும்பை அணியில் மலிங்காவுக்கு முக்கியப்பங்கு உண்டு. நான்கு ஓவர்கள் பந்துவீசி பதினைந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், நிதானமாக ஆடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொடுத்த சச்சின் டெண்டுல்கருக்குத்தான் ஆட்டநாயகன் விருது.